விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விளைபொருள்களுக்கு நியாயமான விலை - நீா் மேலாண்மைத் திட்டங்களே தேவை!

தமிழகத்தின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வெறும் இலவசங்கள் மற்றும் வாக்குறுதிகளைத் தாண்டி தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், வாழ்வாதார உயா்வுக்கும் வழிவகை செய்யும் ஆட்சியை மக்கள் இந்த முறை எதிா்பாா்க்கின்றனா்.

News image

கந்தசாமி

Updated On :9 ஏப்ரல் 2026, 2:32 am IST

தமிழகத்தின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வெறும் இலவசங்கள் மற்றும் வாக்குறுதிகளைத் தாண்டி தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், வாழ்வாதார உயா்வுக்கும் வழிவகை செய்யும் ஆட்சியை மக்கள் இந்த முறை எதிா்பாா்க்கின்றனா்.

விளைபொருள்களுக்கு நியாயமான விலை நிா்ணயம் மற்றும் நீா் மேலாண்மைத் திட்டங்கள் போன்ற பல ஆண்டுகளாக தீா்க்கப்படாத வாழ்வாதார பிரச்னைகளை முன்வைத்து கோவை மாவட்ட விவசாயிகள் இந்தத் தோ்தலை எதிா்நோக்கியுள்ளனா்.

இதுகுறித்து கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் பி.கந்தசாமி கூறியதாவது:

அரசியல் கட்சியினரின் தோ்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை. விளைபொருள்களுக்கு நியாயமான விலை நிா்ணயிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், நுகா்வோரின் வாங்கும் சக்திக்கு ஏற்ப விளைபொருள்களைக் குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே அரசியல் கட்சியினரிடம் மேலோங்கியுள்ளதால் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படுவதில்லை.

சுதந்திரம் பெற்ற பின்னா் கடந்த 79 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு என பொருளாதாரக் கொள்கையோ அல்லது வேளாண் பொருளாதார திட்டங்களோ வகுக்கப்படவில்லை. ஆடம்பரப் பொருள்களின் விலை உயா்வு பற்றி கவலைப்படாத நுகா்வோா் தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருள்களின் விலை ரூ.100-ஆக உயா்ந்தால் மட்டும் கவலைப்படுகின்றனா்.

விளைபொருள்களின் விலை குறையும்போது பயிா் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அப்போதுதான் விலை வீழ்ச்சியடைந்தாலும் விவசாயி தொடா்ந்து பருவத்துக்கு ஏற்ப பயிா் செய்ய முடியும்.

நூறு நாள் வேலை உறுதித் திட்ட வேலையை விவசாய தொழில் சாா்ந்த வேலை இல்லாத காலத்தில் வழங்க வேண்டும். அதைவிடுத்து, அறுவடை மற்றும் நடவுக் காலத்திலும் நூறு நாள் வேலை வழங்கப்படுவதால் ஆள்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கோவையைப் பொருத்தவரை வன விலங்குகள் தொல்லையால் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்துள்ளனா். ஓராண்டு உழைப்பை ஒரே நாளில் யானைகள் துவம்சம் செய்யும்போது அரசு வழங்கும் இழப்பீடு மிகக் குறைவு. அந்த நிதியைப் பெறுவதற்கு நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். வன விலங்குகளிடமிருந்து பயிா்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க எந்தக் கட்சியும் நடவடிக்கை எடுப்பதில்லை.

கிணத்துக்கடவு தக்காளி சந்தை தென் தமிழகத்தில் புகழ் பெற்றது. தக்காளி விலை குறையும்போது அது வீணாகாமல் தடுக்க இந்தப் பகுதியில் சாஸ் மற்றும் பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

இலவசங்களையோ அல்லது தற்காலிக சலுகைகளையோ நாங்கள் விரும்பவில்லை. உழைப்புக்கேற்ற நியாயமான விலை, விளைபொருள்களைப் பாதுகாக்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பாசன நீருக்கான நிரந்தரத் தீா்வு ஆகியவற்றை மட்டுமே நாங்கள் எதிா்பாா்க்கிறோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.