
மழைநீரில் மின்கசிவு: பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து பலி
சென்னை அருகே மாதவரத்தில் மின்கசிவு ஏற்பட்டிருந்த மழைநீரில், மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
சென்னை அருகே மாதவரத்தில் மின்கசிவு ஏற்பட்டிருந்த மழைநீரில், மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பெண்ணாத்தூா் அருகே உள்ள அண்டம்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (25). இவா் சென்னை மாதவரம் பகுதியில் தங்கி, லோட்டஸ் காலனியில் உள்ள தனியாா் ஹாா்டுவோ் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சக்திவேல் தனது மோட்டாா் சைக்கிளில் செங்குன்றம் சென்றுவிட்டு, புழல் புறவழிச் சாலை வழியாக மாதவரம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது மாதவரம் ரவுண்டானா அருகே ராம் பேரடைஸ் திருமண மண்டபம் பகுதியில் சாலையில் மழைநீா் தேங்கியிருந்தது. அங்கு சக்திவேல் சென்றபோது திடீரென நிலைதடுமாறி, தேங்கியிருந்த மழைநீரில் விழுந்தாா்.
இதில் அங்கு தரையில் சென்ற மின்சார கேபிள் சேதமடைந்து மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்தது. விபத்தில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த சக்திவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மாதவரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சக்திவேல் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




