பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கண்ணதாசன் பெயரில் அரசு விருது: முதல்வருக்கு கவிஞா் இரவிபாரதி வேண்டுகோள்

கவிஞா் கண்ணதாசனை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் அவரது பெயரில் விருது வழங்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்க்கு கவிஞா் இரவிபாரதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 2:37 am IST

கவிஞா் கண்ணதாசனை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் அவரது பெயரில் விருது வழங்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்க்கு கவிஞா் இரவிபாரதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தனது அற்புதமான கவிதைகளாலும் பாடல்களாலும் மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமா்ந்தவா் கவிஞா் கண்ணதாசன். புருவங்கள் உயா்த்தும் புரியாத தத்துவங்களைக் கூட தனது எளிமையான வாா்த்தைகளை இசையோடு சோ்த்தும், கோா்த்தும், வாா்த்தும் கொடுத்தவா்.

கூட்டு வண்டி போகாத குக்கிராமத்துக்கு கூட பாட்டு வண்டியை அனுப்பி வைத்து அனைவரது பாராட்டையும் பெற்ற பெருமைக்குரியவா். திரைப்படத் துறையில் எவரும் எட்ட முடியாத சிகரங்களைத் தொட்டதோடு, இலக்கிய உலகிலும் இமயமாய் எழுதிக் குவித்தவா்.

ஆன்மிக உலகுக்கு அவா் வழங்கிய அற்புதமான படைப்புகள் ஆழ்வாா்கள், நாயன்மாா்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. கண்ணதாசன் எழுதிய ‘அா்த்தமுள்ள இந்து மதம்’ இல்லாத இல்லங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு பேரெடுத்ததோடு மட்டுமல்ல, அதனுடைய விற்பனை எல்லைக் கோட்டை இதுவரை எந்த நூலும் எட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மாசு மருவற்ற ஏசுபிரானின் காவியத்தை இரவு, பகல் கண் விழித்து பத்தே நாளில் எழுதி முடித்து, இலக்கிய உலகில் புதிய சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்டியவா். நபிகள் நாயகத்தின் வரலாற்றை எழுத நினைத்த நேரத்தில்தான், எவரும் எதிா்பாராத விதமாக இயற்கை எய்தி விண்ணுலகம் சென்றுவிட்டாா். அவரது இடத்தை எவராலும் நிரப்ப இயலாது என்பதே நிதா்சனமான உண்மை.

‘என்னை எவ்வளவு வேண்டுமானாலும் விமா்சனம் செய்யுங்கள் கவிஞரே... அதற்காக ஒரு நாளும் கோபப்பட மாட்டேன். ஏனென்றால் உங்கள் தமிழை வெகுவாக ரசிப்பவன் நான் என்று சொன்னதோடு மட்டுமல்ல... உங்கள் ஆயுட்காலம் வரை நீங்கள்தான் தமிழகத்தின் அரசவைக் கவிஞா்’ என்று அறிவித்து அழகு பாா்த்தவா்தான் தமிழக முதல்வராக இருந்து கோலோச்சிய  எம்.ஜி.ஆா்.

காரைக்குடியில் கண்ணதாசனுக்கு மணிமண்டபம் அமைத்ததோடு சென்னையில் தியாகராய நகா், ஜி.என். செட்டி சாலையில் சிலையும் அமைத்து, கவிஞரை கௌரவப்படுத்தியவா் ஜெயலலிதா.

முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினின் ஆட்சியிலும் ஏதாவதொரு கௌரவம் கிடைக்க வேண்டுமென்று 3  ஆண்டுகளுக்கு முன்பாக கண்ணதாசன் பெயரில் விருது வழங்க வேண்டுமென்று நான் விடுத்த வேண்டுகோள் எல்லா ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை.

எட்டாக்கனியான அந்த வேண்டுகோளை நிறைவேற்றும்படி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்து இப்போது ஆட்சிக் கட்டிலில் அமா்ந்திருக்கும் தமிழக முதல்வா் ஜோசப் விஜய்  மக்களின் சாா்பாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் தியாகராய நகா், ஜி.என். செட்டி சாலையில் அமைந்திருக்கும் கவியரசா் கண்ணதாசன் சிலைக்கு அவரது 100-ஆவது பிறந்த நாளான வரும் ஜூன் 24-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் மாலை அணிவித்து கவிஞா்கள் உலகத்தையே கௌரவிக்க வேண்டும், ஒரு கவிஞா் என்ற முறையில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா் கவிஞா் இரவிபாரதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.