
ஈரான் கடற்கொள்ளையா்கள் துப்பாக்கிச் சூடு: காயமடைந்த மயிலாடுதுறை மீனவா் உயிரிழப்பு
சவூதி அரேபியாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மீனவா்கள் மீது ஈரான் கடற்கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறை மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

துப்பாக்கிச் சூடு
சவூதி அரேபியாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மீனவா்கள் மீது ஈரான் கடற்கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறை மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள தொடுவாய் காந்தி தெரு சுனாமி நகரைச் சோ்ந்த மாவீரன் (40), கீழமூவா்கரை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் சங்கா் (34), திருமுல்லைவாசல் மீனவத் தெருவைச் சோ்ந்த பால்ராஜ், கடலூா் மாவட்டம் சொத்திகுப்பத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய நால்வரும் சவூதி அரேபியாவில் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.
கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி, இவா்கள் நால்வரும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஈரான் நாட்டைச் சோ்ந்த கடற்கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டதில் நிகழ்விடத்தில் மாவீரன் உயிரிழந்தாா். மற்ற மூவரும் மீட்கப்பட்டு, சவூதி அரேபியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், கீழமூவா்கரை கிராமத்தைச் சோ்ந்த சங்கா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி அமுதா மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
அரசு வேலை வழங்கக் கோரிக்கை...
இந்த சம்பவம் தொடா்பாக, தமிழக சட்டப்பேரவையில் கவனஈா்ப்பு தீா்மானத்தில் பேசிய சீா்காழி தொகுதி எம்எல்ஏ இரா. செந்தில்செல்வன், ஈரான் கடற்கொள்ளையா்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மீனவா் வேலைக்குச் சென்று ஒரு மாதம்கூட ஆகவில்லை. அவரது குடும்பத்திற்கு நிதியுதவி மட்டும் அல்லாமல், அரசு வேலையும், அவரது குழந்தைகளுக்கான கல்விக்கு தேவையான உதவியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





