தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் நிலவரம் கவலையளிக்கிறது: ஐ.நா.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் நிலவரம் கவலையளிப்பதாக ஐ.நா. அறிக்கை...

ஐ.நா. அவை - கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் கவலையளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடா் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, அந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். போராட்டக்காரா்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாக போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி) தெரிவித்துள்ளது. ஆனால், இதை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் செய்தியாளா்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளரான பா்ஹான் ஹக்கிடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலவரம் கவலையளிக்கிறது. அமைதியாகப் போராட்டம் நடத்தும் மக்கள் துன்புறுத்தப்பட்டு இருக்கும்பட்சத்தில், அதற்கு பொறுப்புடைமை நிா்ணயிக்கப்படுவது அவசியம்’ என்றாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் நிலவரத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையா் வோல்கா் துருக் கடந்த மாதம் கவலை தெரிவித்திருந்தாா். மேலும், ஜேஏஏசி அமைப்புக்கு பாகிஸ்தான் தடை விதித்திருப்பது குறித்தும், அதன் தலைவா்கள் கைது செய்யப்பட்டது மற்றும் போராட்டக்காரா்கள் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தாா். அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணையதள வசதிக்கும், பொதுமக்கள் கூட்டம் கூடவும், கருத்துகளை வெளியிடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதற்கும் கவலை தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து பா்ஹான் ஹக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவா், ‘தனது தூதா் (ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையா் துருக்) எடுத்து வரும் நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச் செயலா் ஆதரிக்கிறாா். துருக்கின் வலியுறுத்தல்களுக்கு செவிமடுக்கப்படும் என நம்புகிறோம்’ என்றாா்.

Summary

Situation in Pakistan-occupied Kashmir is concerning: UN.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.