பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

News image

மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர்

Updated On :29 மே 2026, 4:19 pm IST

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் தேவாரப் பதிகத்தில், "வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்' என்று இத்தலத்தைப் போற்றுகிறார்.

தாருகாவனத்து முனிவர்கள் தங்களின் தவ வலிமையால் உதித்த அகந்தையினால் இறைவனை அழிக்க வேள்வி வளர்த்து, பலவற்றை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கித் தன்பால் ஏற்றுக்கொண்டார். முனிவர்கள் தங்கள் தவறை உணர்ந்து தவம் இயற்றியபோது, இறைவன் அவர்களின் பிழையைப் பொறுத்துக் கிருபை செய்ததால் இத்தல இறைவன் "கிருபாபுரீஸ்வரர்' என்ற திருநாமம் பெற்றார்.

வேதங்கள் மூங்கில் வடிவில் இறைவனைப் பூஜித்ததால், இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் (வேணு) விளங்குகிறது. இவ்வழியாகப் பாற்குடம் கொண்டு சென்ற இடையனை இம்மூங்கில் தடுக்க, அவனது பாற்குடம் கவிழ்ந்தது. தொடர்ந்து இந்நிகழ்வு நடந்ததால், மக்கள் ஆயுதங்களுடன் மூங்கில் புதரை வெட்டியபோது குருதி பீறிட்டது. தோண்டத் தோண்ட சுயம்பு லிங்கத் திருமேனி கண்டறியப்பட்டதன் அடிப்படையில், இப்பகுதி மன்னன் இங்கு திருக்கோயிலை எழுப்பினான்.

இதனை இரட்டைப்புலவர்கள், "வேய்ஈன்ற முத்தர் தம்மை வெட்டினானே இடையன் தாய் ஈன்ற மேனி தயங்கவே பேயா, கேள் எத்தனை நாள் என்றே இடறுவான் பால் குடத்தை அத்தனையும் வேண்டும் அவர்க்கு' என்று பாடியுள்ளனர்.

திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலால நஞ்சினை சிவபெருமான் உண்டபோது, அஞ்சிய அன்னை பார்வதி தேவி நஞ்சு கண்டத்தினுள் இறங்காதவாறு தன் கைகளால் தடுத்தார். பின்னர், கணவரின் நலம் வேண்டி இத்தலத்துக்கு வந்து வெண்ணெய்யால் கோட்டை கட்டி, பஞ்சாக்கினி வளர்த்துத் தவமியற்றினார். அன்னையின் தவத்தால் விஷத்தின் வேகம் தணிந்ததால், இத்தலம் "திருவெண்ணெய்நல்லூர்' என்று பெயர் பெற்றது. தருமதேவதை காளையாக மாறி இறைவனுக்கு ஊர்தியாகும் பேற்றினைப் பெற்றதும் இத்தலத்தில்தான்.

தாரகனை வதம் செய்த முருகன் இங்கு வந்து அன்னையையும் அண்ணலையும் வணங்கி மயில் மீது நடனமாடினார் என்பதை அருணகிரியார், "திருவெண்ணெய் நற்பதிபுகழ்பெற அற்புத மயிலின் மிசைக்கொடு திருநடனம் இட்டுறை பெருமானே' என்று பாடியுள்ளார். கம்ப

ராமாயணத்தை இயற்றிய கம்பரைக் காத்து ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊர் இதுவாகும். கம்பர் தன் காப்பியத்தில் பத்து இடங்களில் இவரைக் குறிப்பிட்டுள்ளார்.

மண்ணுலகில் பிறந்து தொண்டு செய்யுமாறு இறைவனால் ஆணையிடப்பட்ட சுந்தரருக்குப் புத்தூர் நற்பதியில் திரு

மணம் நிச்சயிக்கப்பட்டது. மணமேடையில் கிழவேதியர் வடிவில் வந்த இறைவன், சுந்தரரின் பாட்டனார் எழுதிக் கொடுத்த ஓலையைக் காட்டி, "நீ எனக்குப் பரம்பரை அடிமை' எனத் திருமணத்தைத் தடுத்தார். கோபமுற்ற சுந்தரர் ஓலையைக் கிழித்து வேதியரை "பித்தன்' என்று சாடினார்.

கிழவேதியர் அசல் ஓலையைக் காட்டத் திருவெண்ணெய்நல்லூர் சான்றோர் அவைக்கு சுந்தரரை அழைத்து வந்தார். அவையினர் மூல ஓலையின் கையெழுத்தைச் சரிபார்த்து சுந்தரர் அடிமைதான் எனத் தீர்ப்பு வழங்கினர். அதன்பின் அவ்வேதியர் இக்கோயில் கருவறையுள் புகுந்து மறைந்து, பரமனாகக் காட்சியளித்தார். தன்னை "பித்தன்' என்று அழைத்தமையால், அதே சொல்லையே முதலாகக் கொண்டு பாடுமாறு பணிக்க, சுந்தரர் "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

இறைவன் கிருபாபுரீஸ்வரர், ஆட்கொண்டநாதர், தடுத்தாட்கொண்டநாதர் என்றும், இறைவி மங்களாம்பிகை, வேற்கண்ணிநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களை வழிபட்டால் அனைத்துப் பேறுகளும் கிட்டும். சிவாலயத்துக்குரிய அனைத்து சந்நிதிகளும் முறைப்படி அமைந்துள்ளன.

தினசரி நான்குகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர தமிழ் வருடப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், ஆடிசுவாதி, நவராத்திரி, கந்தர் சஷ்டி, அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரங்கள், திருக்கார்த்திகை, தனுர்மாத உற்சவம், ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாதாந்திர பிரதோஷம், பெüர்ணமி, சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன.

தரிசனத்துக்காக காலை 6 } பகல் 12; மாலை 4 } இரவு 8 வரை திறந்திருக்கும் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில், விழுப்புரம்}திருச்சி நெடுஞ்சாலையில், அரசூரிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

- முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.