திருச்செந்தூரைப்போல் வேல்கோட்டம் கொண்ட தலமாக விளங்குவது புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியர் கோயிலாகும்.
பெரும் புலவர் ஆ.நடேச முதலியார், முத்துராசாக்கண்ணனார், ஆ.சிவலிங்கனார், வை.இரத்தினசபாபதி, பேராசிரியர் சுந்தரசண்முகனார், தமிழாகரம் தெ.முருகசாமி ஆகிய தமிழறிஞர்கள் தோன்றிய ஊர் இது என்பதால், வண்டமிழ்பாளையம் என்று அறிஞர்களால் போற்றப்படுகிறது.
பழங்காலத்தில் நொண்டி சித்தர் என்ற மகான் இத்தலத்தில் முருகப்பெருமான் மீது தவமியற்றி வழிபட்டு வந்தார். இந்நிலையில் அவர் ஜீவசமாதி அடைந்தார். அவர் சமாதி மீது சக்திவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பின்பு பழனி ஆண்டவர் சிலையும் நிறுவப்பட்டு கோயிலாக வணங்கப்பட்டு வந்துள்ளது.
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் திருமடத்தின் இரண்டாம் பட்டம் ஞானியார் சுவாமிகள் (1769 - 1832) பழனியாண்டி கோயிலாக விளங்கி வந்ததை அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாற்றினார் என்பது வரலாறு.
ஞானியார் தம் திருக்கரங்களால் கன்னி மூலை விநாயகருக்கு எதிரில் கம்பீரமான சக்திவேல் ஒன்றை நிறுவி, அதன் மீது 30 பாடல்களைக் கொண்ட "முருகன் அந்தாதி' இயற்றி, முருகனைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இதேபோல இங்குள்ள முருகன் மீது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் பாடியுள்ளதாக புலவர்கள் கூறுகின்றனர்.
திருக்கோயிலைச் சுற்றிலும் தேரோடும் மாட வீதிகள் அமைந்துள்ளன. கோயில் முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் அழகிய வரலாற்றுச் சிற்பங்களோடு 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுர இடப்புறத்தில் அறுபடை வீடுகள் சுதைச் சிற்பங்கள் காட்சி தருகின்றன. கோபுரத்தில் நுழைந்ததும் சூரியனும் சந்திரனும் காட்சி தருகின்றனர்.
கோபுர வாயிலைக் கடந்ததும் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இதில் கொடிமரமும், பலிபீடமும் இருக்க, தென்பால் விநாயகர் சந்நிதியும், வடக்கே வீரபாகு சந்நிதியும் அமைந்துள்ளன. அடுத்து மகா மண்டபமும், இதன் வலதுபுறம் நடராஜர் சபையும், மேற்கில் அர்த்தமண்டபமும் அமைந்துள்ளது.
துவார பாலர்கள் வாயிலில் காட்சி தருகின்றனர். மண்டபத்தின் வலது புறத்தில் உற்சவமூர்த்திகளாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விநாயகர், சோமாஸ்கந்தர், மீனாட்சி அம்மை, பராசக்தி அன்னை, மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், சண்டேஸ்வரர் ஆகிய ஐம்பொன் திருமேனிகள் உள்ளன.
வள்ளி, தெய்வானையோடு சிவசுப்பிரமணியர் மூலவராக நின்ற கோலத்தில் வெற்றி வேலையும் சேவல் கொடியையும் தாங்கி அருள் வழங்குகின்றார்.
திருக்கோயில் சுற்று மண்டபத்தில் தென்பால் நால்வர், நவவீரர்கள், ராமலிங்க சுவாமிகள் காட்சி தருகின்றனர். இதன் அருகில் தனிச்சிறப்புமிக்க வேல்கோட்டம் அமைந்துள்ளது. வலச்சுற்றில் நாகநாதரும், தலவிருட்சமான சரக்கொன்றையும் காட்சி தர, மேற்கே ஆதிமூலவரான பழனியாண்டவர் சந்நிதி அமைந்துள்ளது. அதையடுத்து லட்சுமி, சரஸ்வதி, கஜலட்சுமி மற்றும் ஆறுமுகர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
கோயிலின் வலச்சுற்றில் தென்திசை நோக்கி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோட்டம் கல் திருமேனியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் திருவடியில் மாணிக்கவாசகரும் இடம் பெற்றுள்ளார். கருவறைக்கு வடக்கே சோமசுந்தரர் சந்நிதியும், வடகிழக்கில் மீனாட்சி சந்நிதியும் அமைந்துள்ளன.
இத்திருக்கோயிலின் வடக்கே சரவணப் பொய்கை என்ற பிரமாண்ட தீர்த்தம் அமைந்துள்ளது. இதில் பங்குனி உத்திர பெருவிழாவில் 11-ஆம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறும்.
தல மரமான சரக்கொன்றை இலையில் திருநீறு வைத்து வேல்கோட்டத்தில் நின்று "ஓம்' என உச்சரித்து வேலை வணங்கி திருநீற்றையும் பச்சிலையும் உட்கொண்டு வந்தால், சகல நோய்களும் குணமாவதாக நம்பிக்கை. அதேபோல திருமணத் தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் அருளுதல் இத்தலத்தின் தனிச்சிறப்பாக உள்ளது.
முருகப்பெருமான், விநாயகர், சிவபெருமான், அம்பாள் என அனைவருக்குமான முக்கிய விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஐப்பசியில் பத்து நாள் கந்தசஷ்டி விழா, பங்குனி உத்திரத்தில் பத்து நாள் விழாவில் தேர்த்திருவிழா ஆகியவை முக்கியமானவை ஆகும்.
சித்திரை மாத அனுஷத்தில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளும் போது அவரை சிவசுப்பிரமணியர் வரவேற்க , அப்பர் கரையேறும் ஐதிகப் பெருவிழாவும் நடைபெறுகின்றது. வைகாசி விசாகத்தில் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்தல் விழா நடைபெறுகின்றது.
கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் தேவாரத் தலத்திலிருந்து தெற்கே சுமார் இரண்டு கி.மீ தொலைவில் புதுவண்டிப்பாளையம் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைப்பேறு அருளும் இறைவன்

விரதம் இருக்கும் அம்மன்
தொகுதி அலசல் - அம்பாசமுத்திரம்! முழு நம்பிக்கையில் காங்கிரஸ்!

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

