பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங்களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குகளாக இருக்கின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 5:26 pm IST

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங்களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குகளாக இருக்கின்றன.

விளக்கேற்றுதல் சங்க காலத்தில் ஒரு புனிதச் சடங்காக இருந்தது. மாலையில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் அனைத்து மக்களிடமும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

மகப்பேற்றின்போது தூய்மைக் குறைவு ஏற்படுவதாகக் கருதி தூய்மைப்படுத்தும் சடங்கு சங்க காலத்தில் நடைபெற்றிருக்கிறது. நெய்யாடல், நெய்யணி என்று குழந்தை பெற்ற பெண்கள் தீட்டு நீங்கி தூய்மையடைய

எண்ணெய் இட்டு முழுக்காடியதை,

கயந்தலை தோன்றியகாமர் நெய்யணி

நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ

(தொல்.கற்.147, 8}9)

எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

பெண் குழந்தைகள் பருவமடையும் போது அவர்களை நீராட்டும் சடங்கு 'பூப்புனித நீராட்டு' என்று வழங்கப்பட்டது.

கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு

மனைச் செறிந்தனளே வாணுதல் (புறம் 337)

பூப்படைந்த பெண் தனியாக வைக்கப்பட்டாள் என்ற தகவலை புறநானூறு தருகிறது. இவற்றைத் தற்போதும் மக்கள் பின்பற்றுவதைக் காணலாம்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்றும் வழக்கங்களை புறநானூறு காட்டுகிறது. அந்த நாள்களில் சங்கத் தமிழ்ப் பெண்கள் பாண்டங்களைத் தொடுவதில்லை; சமையல் செய்வதில்லை; ஆலயங்களுக்கும் செல்வதில்லை என்கிறது புலவர் பொன்முடியாரின் பாடல்.

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,

கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ

நெய்ம்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின்,

தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,

அணங்குஉடை முருகன் கோட்டத்துக்

கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.

(புறம் 299)

இரண்டு சிற்றூர் மன்னர்களுக்கு இடையே போர் நடக்கிறது. இருவரும் குதிரை மீது இருந்து போரிடுகின்றனர். சீறூர் மன்னன் குதிரை உழுந்துச் சக்கையை உண்டு வளர்ந்தது. இந்தக் குதிரை போரிடுவோரை விலக்கிக் கொண்டு பாய்கிறது. தண்ணடை அரசன் குதிரை நெய்ச்சோறு தின்று வளர்ந்தது. பிடரி மயிர் அழகாகக் கத்திரிக்கப்பட்டு மாலை அணிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் ஒதுங்கி நிற்கிறது.

எப்படி ஒதுங்கி நிற்கிறது என்பதற்கு உவமை சொல்ல வந்த புலவர், 'கலம் தொடா மகளிர்' போல நின்றது என்கிறார். மாதவிடாய்க் காலத்தில் எந்தப் பாத்திரத்தையும் தொடாது சமையல் செய்யாமல் ஓய்ந்திருக்கும் மகளிர் முருகன் கோயிலுக்குள் நுழையாமல் அதன் வெளிப்புறம் நின்று கும்பிடுவதைப் போல நெய்ச்சோறு தின்ற குதிரை ஒதுங்கி நின்றது.

ஒரு புதிய பொருளை விளக்குவதற்கு மக்கள் நன்கு அறிந்த பொருளை உவமையாகக் கூறி விளங்க வைப்பார்கள். குதிரை ஒதுங்கி நிற்பதற்கு கலம் தொடா மகளிரை உதாரணமாக வைக்கிறார்கள் என்பதில் இந்த வழக்கம் தமிழ் மண்ணில் நிலைபெற்றிருந்த அறிவார்த்தமான வழக்கம் என்று புரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.