லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மறக்கருணை வள்ளல்

கம்பர் இராமனைத் தம் காப்பியத்தில் பல இடங்களில் வள்ளல் என்று குறிப்பிடுவதுண்டு.

Published On :1 பிப்ரவரி 2024, 3:22 pm IST

கம்பர் இராமனைத் தம் காப்பியத்தில் பல இடங்களில் வள்ளல் என்று குறிப்பிடுவதுண்டு. விசுவாமித்திரர் ஜனகனிடம் குமாரர்கள் நால்வர் குறித்தும் கூறுகின்றபோது, பரதனைக்காட்டி, "எள்ளரிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த வள்ளலையே அனையானை' என்று இராமனை வள்ளல் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

முதல் போர்புரி படலத்தில், இராமனின் வீரத்துக்கு முன் அனைத்தையும் இழந்து இராவணன் நிராயுதபாணியாக நிற்கின்ற தருணத்தில் இராமன் செயலை வியந்து, 

ஆள்ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்றுபோய், போர்க்கு
நாளைவா' எனநல்கினன் - நாகுஇளங்க முகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

என்கின்றார். மூலவதைப் படலத்தில் அரக்கர்களை அழித்த பிறகு, இலக்குவன் இராவணனோடு பொருதும் இடத்திற்கு இராமன் சென்றபோது, 
ஆகுலம் துறந்ததேவர் 
அள்ளினர் சொரிந்த வெள்ளச்
சேகுஅறு மலரும் சாந்தும் 
செருத்தொழில் வருத்தம் தீர்க்க,
மாகொலை செய்த வள்ளல், 
வாள்அமர்க் களத்தைக் கைவிட்டு
ஏகினன், இளவலோடும் 
இராவணன் ஏற்றகைம் மேல்.

என்கின்றார். பேராண்மையின் உச்சத்தில் நின்று, "இன்று போய், போர்க்கு நாளை வா' என்று இராவணனுக்கு வாழ்வளித்து உதவிய ஊராண்மை நிறைந்த இராமனை வள்ளல் என்று அழைப்பது சாலப்பொருந்தும்.

போர்க்களத்தில் பல்லோர் அழியக் காரணமாக நின்றவனை மாகொலை செய்த வள்ளல்' என்று போற்றுவதையும் காண்கிறோம்.

பொதுவாக ஈத்துவக்கும் இன்பம் அறிந்தாரை வள்ளல் என்று அழைப்பது வழக்கம். பல்லுயிர் எடுத்துக் கொன்று குவித்தவரை வள்ளல் என்று உரைப்பது எங்ஙனம் பொருந்தும்?

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல்

என்று குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில் கூறியுள்ளது போன்று கம்பரும் கும்பகருணனிடத்தில் வீடணன் பேசும்போது, 

உடலிடைத் தோன்றிற்று ஒன்றை 
அறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
சுடல் உறச்சுட்டு வேறுஓர்
 மருந்தினால், துயரம் தீர்வர்!

என்று கூறி, துன்பம் தரும் அறுவை சிகிச்சையைச் செய்தாலும் மருத்துவரை யாரும் கடிந்து கொள்வதில்லை. காரணம், அது நம் உடல்நலம் கருதியே என்று உணர்வர். 

இராவணன் அவையில் அனுமன், "தீயோர் இறந்து உகநூறி,  தக்கோர் இடர் துடைக்க வந்தவன் இராமன்' என்று கூறுகின்றான்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நாம்
பயங் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

என்று கொடுமையைக் கண்டு கொதித்தெழ வேண்டும் என்று பாப்பாவுக்குப் பாடுகின்றார் பாரதி.

உலக நன்மை கருதி, பல்லுயிர்களை எடுத்தலும்கூட மேலானதுதான் என்பதனை உணர்த்தும் பொருட்டு மாகொலை செய்த மறக்கருணை வள்ளலாகவும் நாளை வா என்று உயிர்கொடுத்த அறக்கருணை வள்ளலாகவும் இராமனைப் போற்றுகின்றார் நற்கவி தந்துதவிய கம்ப வள்ளல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.