தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எழுத்தாளர்களின் தோழன்...

பலரும் வெளியிடத் தயங்கிய 45-க்கும் மேற்பட்ட நூல்களைத் தனது 'சரவணபாலு பதிப்பகம்' மூலம் வெளியிட்டிருக்கிறார் எழுபத்து ஆறு வயதான சண்முகம் சந்திரசேகரன்.

சண்முகம் சந்திரசேகரன் - SRIRAM_RAMESH

Published On :1 நவம்பர் 2026, 12:29 pm IST

பலரும் வெளியிடத் தயங்கிய 45-க்கும் மேற்பட்ட நூல்களைத் தனது 'சரவணபாலு பதிப்பகம்' மூலம் வெளியிட்டிருக்கிறார் எழுபத்து ஆறு வயதான சண்முகம் சந்திரசேகரன். திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று, திருவாரூர் அரசுக் கல்லூரியில் இளநிலை எழுத்தராகப் பணியைத் தொடங்கினார்.

பின்னர் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசுக் கல்லூரி, தருமபுரி அரசுக் கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றினார். தொடர்ந்து வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை, திருச்சி மாநகரங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மனைவி சகுந்தலா விழுப்புரத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றதால், இங்கேயே வசித்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'சிறுவயதிலேயே வாசிப்பு என்றாலே தனி அலாதிதான். எங்கள் ஊர் வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்களிடம் காசு கொடுத்து, திருச்சி அல்லது துறையூரில் புத்தகங்களை வாங்கி வரச் சொல்லி, அதைப் படிப்பேன். விடுமுறையில் குருவம்பட்டியிலிருந்து திருச்சி மாவட்ட மைய நூலகத்துக்கு மிதிவண்டியில் சென்று படிப்பேன்.

எழுத்தாளர்கள் அகிலன், நா.பார்த்தசாரதி, சாண்டியல்யன், தமிழ்வாணன், பி.டி.சாமி, வல்லிக்கண்ணன் போன்றவர்களின் நூல்களைப் படிப்பேன். எழுத்தாளர் பிரபஞ்சன், இலங்கையைச் சேர்ந்த செ.யோகநாதன், செ.கணேசலிங்கன் ஆகியோரது நட்பு வட்டாரத்திலும் இருந்தேன்.

பணியில் இருந்ததால், எழுத்தாளராக முடியவில்லை என்றாலும், நூல்கள் மீதான அறிமுகக் கூட்டம், விமர்சனக் கூட்டங்களை நண்பர்களோடு இணைந்து நடத்தியிருக்கிறேன். 'கண்ணாடித் தளம்', 'மக்கள்தளம்' போன்ற முற்போக்கு இதழ்களை நடத்தினேன். என்னுடைய நண்பரும், மார்க்சிய அறிஞருமான கோ.கேசவனின் நூல்களை வெளியிடுவதற்காக பதிப்பகத்தைத் தொடங்கினேன். எழுத்தாளர்கள் கோ.கேசவன், அஸ்வகோஷ், பாவண்ணன், கோபிகிருஷ்ணன், பழனி, சின்னசாமி உள்ளிட்டோரின் 45-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளேன்.

எழுத்தாளர் அஸ்வகோஷின் சிறகுகள் முளைத்த நூலைப் பதிப்பித்து வெளியிட்ட போது, எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், அந்த நூல் 2 முறை சாகித்ய அகாதெமி விருதுக்கான போட்டியில் பங்கேற்றது. எழுத்தாளருமான கேசவனின் படைப்புகள் குறித்து நான்காவது தொகுப்பை அவருடைய மகன் மதுபாலன் உதவியுடன் வெளியிட இருக்கிறேன்.

என்னுடைய கவிதை நூல் ஒன்றையும், பெரியார் ஈ.வெ.ரா. குறித்த நூலையும் விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். 'சாதியும் தீண்டாமையும்' என்ற நூலை எழுதி வருகிறேன். விழுப்புரம் கலவரம் பற்றிய நாவல் ஒன்றை வெளியிட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாகும்.

வீட்டிலேயே நூலகம்

எனது வீட்டின் மேல்தளத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் உள்ளது. எனது எழுத்தாள நண்பர்கள் எழுதுவதற்காக வீட்டின் மேல்தளத்தில் தனி அறையைத் தயார் செய்து கொடுத்துள்ளேன்.

போட்டித் தேர்வாளர்களுக்கும் உதவி

என்னுடைய ஓய்வூதியத் தொகையிலிருந்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள கையேடுகளை வாங்தித் தருதல் போன்றவற்றையும் மேற்கொண்டு வருகிறேன். ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்தல், மருந்து-மாத்திரைகளை வாங்கித் தருதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறேன். இதற்கு மனைவியும், குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்கின்றனர்' என்றார் சந்திரசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.