லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

Published On :28 ஜூன் 2026, 4:01 am IST

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

ஓராண்டாகப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் இந்தக் கல்யாண மஹால் குறித்து திருவையாறைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரும், எழுத்தாளரும், வழக்குரைஞருமான

நா. பிரேமசாயி கூறியது:

'திருவையாறின் அடையாளமாக காவிரிக் கரையோரம் நிற்கும் மூன்றடுக்குக் கட்டடம் கல்யாண மஹால். மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி 1821- ஆம் ஆண்டில் தஞ்சாவூரிலிருந்து வாரணாசிக்கு யாத்திரை புறப்பட்டார். இரண்டாண்டு நீண்ட யாத்திரையில் அவர் கயா, கொல்கத்தா, புரி போன்ற பழைமையான ஊர்களுக்கும் சென்றார். அவர் தனது யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் திருவையாறில் தங்கினார்.

அப்போதே அவருக்குக் கங்கைக் கரையில் உள்ளது போன்று திருவையாறு காவிரிக் கரையிலும் எழில்மிகு கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. திருவையாறு புஷ்ய மண்டபத்துக்கும், திருமஞ்சன படித்துறைக்கும் இடையில் இருந்த அரசுக்குச் சொந்தமான பெரிய தோட்டத்தில் இக்கட்டடத்துக்கான வேலைகளை மன்னர் உடனே தொடங்கிவிட்டார்.

அக்காலத்தில் கரைபுரண்டு ஓடிய காவிரியில் நீரோட்டத்தைத் தாங்கும் அளவுக்குக் கட்டடத்தின் அடித்தளம் கருங்கல், ஈயம், கடுக்காய்த் தூள், வெள்ளப்பாகு கொண்ட கலவையால் அமைக்கப்பட்டது. இந்த மூன்றடுக்கு மாளிகை மரம், இரும்பு இல்லாமல் செங்கல், நன்கு அரைத்த சுண்ணாம்பு கொண்ட கலவையால் கட்டப்பட்டது.

இந்த மாளிகையை பெரிய செங்கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதன் சுவர்கள் முகம் பார்க்கும் அளவுக்கு வழுவழுப்பாக இருந்தன.

கல்யாண மால்

அப்போது காவிரியைக் கடந்து திருவையாறுக்கு வர ஆற்றில் பாலம் இல்லை. ஆற்றில் நீரோடும் காலங்களில் திருவையாறு வர ஓடங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், இந்த மாளிகையின் தெற்குப் பகுதியிலுள்ள காவிரிப் படித்துறைதான் வாயில் பகுதியாக இருந்தது. இந்த மாளிகையிலும், அதன் எதிர்க்கரையிலும் ஓடத்துறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாளிகைக்கென இருந்த அழகிய ஓடங்களில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்தனர். இந்தப் படித்துறையின் மேற்புறம் 'கல்யாண மால் 1824' என்ற ஒரு கல்வெட்டு உள்ளது. எனவே இந்த மாளிகையின் பெயர் 'கல்யாண மால்' என்றும், இது 1824- ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தஞ்சாவூர் அரண்மனையின் அஞ்சு அங்கணத்தின் மாடியை இரண்டாம் சரபோஜி மன்னர் கட்டினார். அதை 'கல்யாண மஹால்' என அழைத்தனர். திருவையாறில் ஒரு கல்யாண மஹால் கட்டப்பட்ட பிறகு, இதைப் புது 'கல்யாண மால்' என தஞ்சாவூர் அரண்மனையில் அழைத்தனர்.

சரபோஜி மன்னர் யாத்திரை சென்று திரும்பும்போது, கல்யாணி என்ற பெண்ணை விரும்பி அழைத்து வந்ததாகவும், அவரது விருப்பப்படியே இந்த மாளிகை கட்டப்பட்டதாகவும், இதன் பெயர் 'கல்யாணி மால்' என்றும் சொல்லப்படுவது உண்டு. இங்கு கல்யாணி என்பவரும், அவரது தங்கையும் வசித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர் 'ராணி கல்யாணிபாய்' என அழைக்கப்பட்டார்.

Story image

கல்யாணிபாய் படித்துறை

கல்யாண மஹால் வாயிலில் நீளமான படகுக் கற்படித்துறை அமைக்கப்பட்டது. இதனால், கல்யாண மஹாலில் இருந்த அரசக் குடும்பத்தினர் காவிரியில் நீராடுவதற்காக இந்த மாளிகையின் அருகிலேயே மண்டபத்துடன்கூடிய ஓர் அழகியப் படித்துறை அமைக்கப்பட்டது. இதை 'ராணி கல்யாணிபாய் படித்துறை என அழைத்தனர். படித்துறையின் கீழ் மாடத்தில் ஒரு பெண் வணங்கி நிற்கும் காட்சி சிற்பமாக உள்ளது. அது இராணி கல்யாணிபாயின் சிற்பம் எனச் சொல்லப்படுகிறது. எதிர் மாடத்தில் கிருஷ்ணன் குழல் ஊதி நிற்கும் காட்சி சிற்பமாக்கப்பட்டுள்ளது.

கல்யாண மஹாலில் தங்கியிருந்த பெண்கள் புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் உபாங்க லலிதா விரதம், கெளரி பூஜை, ஏகாதசி விரதம், இரவில் பஜனை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தியுள்ளனர். திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான சித்திரைத் திருவிழாவில் நான்காம் நாள் உற்சவத்தின்போது அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கல்யாண மஹாலில் எழுந்தருளுவார். கல்யாண மஹால் சார்பாகச் செய்யப்படும் மண்டகப்படியை ஏற்று, கயிலாச வாகனத்தில் வீதி உலா புறப்படுவார். அதனாலேயே கல்யாண மஹால் வளாகத்தில் உள்ள ஒரு படித்துறை 'கயிலாச வாகனப் படித்துறை என்ற பெயரைப் பெற்றது.

அரசர் கல்லூரி

தஞ்சாவூரில் மராட்டிய ஆட்சி முடிந்து ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி ஏற்பட்ட பிறகும் கல்யாண மஹாலில் மராட்டிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கியிருந்தனர். இவர்களில் லாடுபாயி, பாயம்மா பாயி ஆகிய இருவர் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.

இரண்டாம் சரபோஜி எதிர்காலத்தில் தனது சொத்துகளைக் கொண்டு அறப்பணிகள் மேற்கொள்ள அறக்கட்டளை சாசனத்தை ஏற்படுத்தினார். அதைச் செயல்படுத்த ஆங்கிலேயர் ஆட்சியில் பஞ்சாயத்தார்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் 1881-ஆம் ஆண்டு கல்யாண மஹாலின் ஒரு பகுதியில் ஒரு வேத பாடசாலையை ஏற்படுத்தினர். பிற்காலத்தில் அது அரசர் கல்லூரியாக வளர்ந்தது. திருவையாறில் 1993 -ஆம் ஆண்டு அரசு இசைக் கல்லூரி தொடங்கப்பட்டபோது, அக்கல்லூரி கல்யாண மஹாலில்தான் முதலில் செயல்படத் தொடங்கியது. பின்னர், அரசர் கல்லூரியின் மாணவிகள் விடுதி செயல்பட்டு வந்தது'' என்கிறார் பிரேமசாயி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.