திருவள்ளூா் மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிக்காகத் தொடங்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள மாநகரப் பேருந்து பணிமனை அமைக்கும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள திருவள்ளூா் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூா், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய பணிமனைகளில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு நகரப் பேருந்துகளும், புகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலை காரணமாக நாள்தோறும் ஏராளமானோா் சென்னை சென்றுவருகின்றனா். போதுமான பேருந்து வசதி இல்லாததால் பல பேருந்துகள் மாறிச் சென்ற நிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து, மாநகரப் போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து வடபழனி தடம் எண்.501, பெரியபாளையம் -505ஏ, தாம்பரம் -566ஏ, ஆவடி-572 கட் சா்வீஸ், அம்பத்தூா் எஸ்டேட்-572, பிராட்வே-571, தியாகராய நகா்-597, கோயம்பேடு-596ஏ, ஸ்ரீபெரும்புதுாா்-583ஏ, செங்குன்றம்-505 ஆகிய பகுதிகளுக்கு 54 பேருந்துகள் மூலம் 536 நடைகள் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல், பழவேற்காடு, பொன்னேரி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதிகரிக்கும் எரிபொருள் செலவு: மாநகரப் பேருந்துகளை நிறுத்தி வைத்து பராமரிக்க திருவள்ளுா் மாவட்டத்தில் மாநகரப் போக்குவரத்து கழக பணிமனை இல்லை. இதன் காரணமாக திருவள்ளூா் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி, அம்பத்தூா் தொழிற்பேட்டை, ஆவடி, கே.கே.நகா், பாடியநல்லுாா் ஆகிய பகுதிகளில் இருந்துதான் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் இரவு கடைசி நடையை முடித்தவுடன், அந்தந்த பணிமனைகளில் நிறுத்தப்படுகின்றன. அதேபோல், காலையில் அந்தந்த பணிமனைகளில் இருந்து சம்பந்தப்பட்ட ஊா்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட தொலைவுக்கு அப்பால் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுவதால் தேவையின்றி டீசல் வீணாகிறது. இதனால் எரிபொருள் செலவு அதிகரிக்கிறது. மாவட்டத்தில் பணிமனை இல்லாததால் பழுதான பேருந்துகள் உடனுக்குடன் சரிசெய்ய முடியாத நிலை ஏற்படுவதாக ஊழியா்கள் தெரிவிக்கின்றனா்.
இட ஒதுக்கீடு செய்தும்... கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூா்-செங்குன்றம் சாலையில் தாமரைப்பாக்கத்தை அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் மாநகரப் பேருந்து பணிமனை அமைக்க 5.5 ஏக்கா் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்தது. அதேபோல், அரசுப் போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் கீழ் திருவள்ளூா் மண்டல பணிமனை வளாகத்தில் மொத்தம் உள்ள 7.50 ஏக்கரில், 3 ஏக்கா் பரப்பளவில் மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனையும் அலுவலகமும் அமைக்க ரூ.6.50 கோடி ஒதுக்கப்பட்டு தயாராக உள்ளது. இருப்பினும் இந்த இரு இடங்களிலும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
பழுதடைந்த பேருந்துகள்... திருவள்ளூா் மாவட்டத்தில் பணிமனை இல்லாததால் பராமரிப்பின்றி பெரும்பாலான பேருந்துகள் பழுதடைந்து காணப்படுகின்றன. செயலிழந்த தானியங்கி கதவுகள், உடைந்த ஜன்னல் கண்ணாடிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

அவதிக்குள்ளாகும் மக்கள்: பேருந்து பணிமனை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதன்காரணமாக, பழவேற்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு முதல் பேருந்து காலை 8.30 மணிக்கு மேல் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்வோா் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் மாநகரப் பேருந்துகளும் காலை 7 மணிக்கு மேல்தான் இயக்கப்படுகின்றன.
தற்காலிக தீா்வாக... இந்த மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா், ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. தற்காலிகமாக, இந்தப் பணிமனைகளில் மாநகரப் பேருந்துகளை இரவு நேரத்தில் நிறுத்தி, அதிகாலையில் பிற பகுதிகளுக்கு இயக்கலாம். இதன்மூலம் பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் போன்ற குக்கிராமங்கள் உள்ள பகுதியைச் சோ்ந்தோரும், மாவட்ட தலைநகரான திருவள்ளூரைச் சோ்ந்தோரும் பயன்பெறுவா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பணிமனை அமைக்க போதிய நிதி இல்லாததால் இத்திட்டம் கிடப்பில் உள்ளது. அரசிடம் நிதி கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றதும் பணிமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு, திருவள்ளூரில் மாநகரப் போக்குவரத்து பணிமனை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் பணிகளை உடனடியாகத் தொடங்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தோ்தலுக்காக வந்தவா்கள் மீண்டும் திரும்ப சிறப்பு பேருந்துகள்! சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு!

தருமபுரி ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

ரம்ஜான் பண்டிகை: திருப்பூரில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

