
கோயில் நிலத்தில் நிரந்தர சாலை: அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு!
இந்துசமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
வேளச்சேரியில் மழை நீர் தேங்குவதால், கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக வேளச்சேரியில் மழை நீர் தேங்குவதால், மக்கள் பயன்பாட்டுக்காக வெங்கடேஸ்வரா நகர், லட்சுமிபுரம் இரண்டாவது பிரதான சாலையில் இருந்து ஐந்தாவது பிரதான சாலையை இணைக்க தார் சாலை அமைப்பதற்காக வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் கோயில் மற்றும் யோக நரசிம்ம கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்பிலான, 5.41 கிரவுன்ட் நிலத்தை பயன்படுத்த தடையில்லாச் சான்று கோரி சென்னை மாநகராட்சி ஆணையர் இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில்,சென்னை மாநகராட்சி ஆணையர் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், இந்த நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக அக்டோபர் 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியைச் சேதப்படுத்தி, ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களை பயன்படுத்தி, நிரந்தர தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகக் கூறி, சேலத்தை சேர்ந்த ஏ. ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சம்பந்தப்பட்ட பகுதியில் சாலைகளை இணைக்க வசதியாக அரசு புறம்போக்கு நிலம் இருந்தபோதும், கோயில் நிலத்தைப் பயன்படுத்துவது அறநிலையத்துறை சட்டத்துக்கு விரோதமானது என்பதால், சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கோயில் நிலத்தில் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிர்ஷ்டவசமாக இரண்டு புயல்களும் சென்னையை தாக்காத நிலையில், ஆய்வுக்குச் சென்ற அமைச்சரிடம் அந்தப் பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாக, கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அவசரநிலை கருதி தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் என தெரிவித்தனர். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்துசமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The High Court has directed the Hindu Religious and Charitable Endowments Department and the Greater Chennai Corporation to file a response in a case challenging a proposal to construct a permanent road on temple land—a project intended to address rainwater stagnation in Velachery.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






