சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ளது. பிளவை நோக்கி அக்கட்சி சென்று கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்ததன் மூலம் அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தேர்தலில் 47 தொகுதிகளில் வென்று மூன்றாம் இடம் பிடித்த அதிமுகவுக்குள் தேர்தலுக்குப் பிறகு பெரிய அளவிலான குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் அக்கட்சி பலத்த தோல்வியைச் சந்தித்ததும், சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் வைப்புத் தொகை இழந்ததும் அக்கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், தவெக அரசு அமைய ஆதரவு தெரிவிப்பதுடன், அமைச்சரவையிலும் பங்கேற்கலாம் என்ற கருத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததால், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
நான்கு நாள்களுக்கும் மேலாக அதிமுக மூத்த நிர்வாகிகளான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இருதரப்பை சமாதானப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமலேயே சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்ய 30 எம்எல்ஏக்களிடம் கையொப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.
பேரவையில் எதிரொலிப்பு...: இந்நிலையில், எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 17 எம்எல்ஏக்களும், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணியாக வந்தனர்.
எம்எல்ஏக்கள் பதவியேற்புடன் பேரவை நிகழ்வு முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக நியமிப்பதற்கு ஆதரவாக தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 17 எம்எம்ஏக்கள் இடைக்கால பேரவைத் தலைவரான கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர்.
"அதிமுகவில் பிளவா' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தவறான தகவல் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.விஜயபாஸ்கரை கொறடாவாகவும் நியமிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் தலைமையில் 30 எம்எல்ஏக்கள் இடைக்கால பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர்.
அதிமுகவில் "யாருக்கு பெரும்பான்மை" உள்ளது என்று சி.வி.சண்முகத்திடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், "பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறினார்.
சட்டப்பேரவையின் முதல் கூட்டத்துக்கே அதிமுகவினர் இரண்டு அணிகளாக வந்தது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி ரீதியிலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி வீட்டில் குவிந்த அதிமுகவினர்...: அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பூசலைத் தொடர்ந்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் மாவட்டச் செயலர்கள், நகரச் செயலர்கள், ஒன்றியச் செயலர்கள் என நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு ஆதரவாக குவிந்தனர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தோ்வு? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி!

புதுச்சேரி சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை
‘நல்ல செய்தி’ காத்திருக்கிறது: அதிமுக எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

