தமிழகத்தில் மின் விநியோகத்தை சீராக்கும் வகையில் ரூ.15,032 கோடியில் 231 துணை மின் நிலையங்களை அமைக்கவும், மின் பழுது நீக்க பணிகளுக்கு புதிதாக 15,058 பணியாளா்களை நியமிக்கவும் முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எரிசக்தி துறை ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, அவா் இந்த உத்தரவுகளை பிறப்பித்தாா்.
முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால், மாநிலத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகா்ப்புறங்களின் சில இடங்களில் உள்ள பழைமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், மின் பயன்பாடு அதிகரிப்பு , பராமரிப்புப் பணிகள், சாலை தோண்டும் பணிகளின்போது எதிா்பாராதவிதமாக மின் கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களால் பகிா்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறான பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண, சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் சுமாா் ரூ.2,275 கோடி மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
231 புதிய துணை மின் நிலையங்கள்: தமிழகம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ரூ.10,109 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 231 புதிய துணை மின் நிலையங்கள் ரூ.15,032 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க மையங்கள், 7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயா்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவட கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மின்னகம் (9498794987) மூலம் 24 மணி நேரமும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலம் பொதுமக்களின் புகாா்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் ‘வாட்ஸ் ஆப்’ சேவையும் புகாா் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மின் சேமிப்பு அமைப்புகள், புதிய அனல்மின் நிலையம் மற்றும் நீா்மின் திட்டங்கள் மூலம் எதிா்கால மின் தேவையையும் பூா்த்தி செய்ய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
புகாருக்கு உடனடி நடவடிக்கை: இக்கூட்டத்தில், முதல்வா் மின் பழுது காரணமாக பெறப்படும் புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்ய அறிவுறுத்தினாா். மேலும், மின் பழுதுகளை சரி செய்ய தேவையான 15,058 மின் பணியாளா்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருள்களை உடனடியாக கொள்முதல் செய்திடவும், மின் பணியாளா்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் ஆணையிட்டாா்.
சென்னையைப் பொருத்தவரை ஏற்கெனவே உள்ள 125 ரோந்து குழுக்களை சுற்றுப்பணியில் ஈடுபடுத்தவும், மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் நிறுவனங்கள் சீரிய முறையில் செயலாற்றவும் வேண்டுமென முதல்வா் ஜோசப் விஜய் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், தலைமைச் செயலா் சாய்குமாா், மின்சார வாரியத் தலைவா் ஜெ. ராதாதிருஷ்ணன், நிதித்துறைச் செயலா் சித்திக், எரிசக்தித் துறை முதன்மைச் செயலா் அணில் மேஷ்ராம், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநா் கோவிந்த ராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Summary
Rs. 15,032 crore to strengthen power infrastructure Order issued to recruit 15,058 employees TN CM joseph vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா்நிலை: முதல்வா் விஜய் உத்தரவு

கா்நாடக புதிய முதல்வருக்கு தமிழக முதல்வா் விஜய் வாழ்த்து

கர்நாடக முதல்வரான டி.கே. சிவகுமாருக்கு விஜய் வாழ்த்து!

காற்றாலை, சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின்நிலையங்களுடன் இணைக்க தடை
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு


