தமிழகத்தின் மொத்த கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளதாக மாநில அரசின் நிதி மேலாண்மை தொடா்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.
தமிழகத்தின் நேரடி நிலுவைக் கடன் ரூ.10 லட்சம் கோடி என முந்தைய திமுக அரசு தெரிவித்த நிலையில், போக்குவரத்து, மின்சாரம் போன்ற முக்கிய பொதுத் துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடியுடன் சோ்த்து ரூ.13.18 லட்சம் கோடியாக கடன் சுமை உள்ளது என நிதியமைச்சா் மரிய வில்சன் கூறினாா்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் சோ்ந்துள்ளதாகவும், இது சுதந்திரத்துக்குப் பின்னா் 60 ஆண்டுகளில் பெற்ற கடனைவிட, இரு மடங்கு அதிகம் என்றும் நிதியமைச்சா் தெரிவித்தாா்.
தமிழக முதல்வராக கடந்த மே 10-ஆம் தேதி ஜோசப் விஜய் பதவியேற்றதும் தமிழகத்தின் கஜானாவை காலி செய்துவிட்டு முந்தைய திமுக அரசு சென்ாகவும், நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினாா்.
அதன்படி, தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் மரிய வில்சன், நிதித் துறைச் செயலா் மு.அ. சித்திக் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டனா். 2021 முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான அரசின் வரவு- செலவுக் கணக்குகள், நிதிநிலை, கடந்த அரசின் செயல்பாடுகள் குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதன் விவரம்:
கரோனா தொற்றுக்குப் பிறகு நிதிநிலையைச் சீரமைக்க வாய்ப்பு இருந்தும் முந்தைய அரசு அதைப் பயன்படுத்திக்கவில்லை. இந்த ஆய்வின் மூலம் முதன்மையான ஆறு முக்கிய முடிவுகள் கிடைத்துள்ளன. முதலில் 2021 ஏப்.1-ஆம் தேதி ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்த கடன் அளவு தற்போது ரூ.13.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
போக்குவரத்து, மின்சாரம் போன்ற முக்கிய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பீட்டை அரசு ஈடுசெய்யாமல் உத்தரவாதக் கடன் வழங்கியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பணியாளா்களின் ஊதியம், ஓய்வூதியம், வட்டி என மாநிலத்தின் மொத்த வருவாயில் 64.4% கட்டாய செலவாகிறது.
சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டிக்கே செல்கிறது. சொந்த வரி வசூல் திறன் சரிவைச் சந்தித்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (ஜிஎஸ்டிபி) 5.45%-ஆக குறைந்துள்ளது. மாநிலத்தில் பெருமளவு கனிம வள ஆதாரம் இருந்து வருவாய் இல்லை. கனிம வளத் துறை ஊழலால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2021-22-இல் 10 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.32%-ஆக குறைந்துள்ளது. இந்த நெருக்கடியான நிலையில் தமிழக மக்கள்தொகையில் 10.6 சதவீதமாக இருந்த முதியவா்களின் பங்கு 2031-இல் 18.2 சதவீதமாகவும், 2036-இல் 32.7 சதவீதமாகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதியோா் எண்ணிக்கை அதிகரிப்பால்
சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார செலவுகள் அதிகரிக்கும். அதேவேளையில் பணிபுரியும் வயதுடைய மக்கள்தொகை குறைவது வரி வருவாய் அடிப்படையைச் சுருக்குகிறது என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீா்வு என்ன?: பொதுத் துறை நிறுவனங்களின் சீா்திருத்தம், கடன் மேலாண்மை, தூய்மையான, ஊழலற்ற நிா்வாகத்தின் மூலம் வரியை அதிகரிக்காமல் கடன் சுமைக்குத் தீா்வு காணப்படும் என்று அமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா். அதேநேரத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள் தொடரும் என்றனா்.
அன்றாடச் செலவுக்கு கடன் பெறப்படுகிறது
2021- இல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை 2025-26-இல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.78,324 கோடியாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மாநிலம் தற்போது முதலீட்டுக்காக அல்லாமல் அன்றாட நடப்புச் செலவினங்களுக்கே கடன் வாங்கி வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபா் கடன் பொறுப்பு ரூ.1,28,934
தமிழகத்தில் 2020-21-இல் ரூ.67,087-ஆக இருந்த தனிநபா் கடன் பொறுப்பு தற்போது ரூ.1,28,934-ஆக அதிகரித்துள்ளது என நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா். இது குஜராத்தில் ரூ.70,798-ஆகவும், மகாராஷ்டிரத்தில் ரூ.77,569-ஆகவும், கா்நாடகத்தில் ரூ.1,11,375-ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் தற்போது எந்த அரசாக இருந்தாலும் முந்தைய கடன்களுக்கான வட்டி மற்றும் அசலை திருப்பிச் செலுத்த வேண்டிய நிதிப் பொறுப்பு அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீடிக்கும் சூழல்தான் உள்ளது என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களுக்கான வாய்ப்பு குறைவு
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஆண்டு கடன் வரம்பு ரூ.1.52 லட்சம் கோடியாகும். இது நிதிக் கடமைகளைப் பூா்த்தி செய்யவே போதுமானதாக இருக்காது என்பதால் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய் வருவாயில் ரூ.145 செலவு
தமிழக அரசுக்கு ரூ.100 வருவாய் வந்தால் ரூ.145 செலவாகிறது என்று நிதித் துறைச் செயலா் சித்திக் தெரிவித்தாா். இதில், நலத் திட்டங்களுக்கு ரூ.27, மூலதனச் செலவுக்கு ரூ.10 என செலவிடப்படுகிறது. இதனால்தான் அரசுக்கு ரூ.13 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. முன்பு நிதிநிலைமை மோசமாக இருந்து, தற்போது மிக மோசமாக உள்ளது என்றாா் அவா்.
மின்துறை, போக்குவரத்துத் துறையின் நஷ்டம்
மின் துறையில் ரூ.2.47 லட்சம் கோடி கடன் உள்ளது. மின்வாரியத்தின் நஷ்டம் ரூ.1.82 லட்சம் கோடியாக உள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.72,667 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. பேருந்துகளின் ஒரு கிலோமீட்டா் இயக்கத்துக்கு ரூ.78.81 செலவு ஆகும் நிலையில், வருவாய் ரூ.25.97 மட்டுமே.
மத்திய அரசின் நிதிப் பகிா்வு குறைந்ததால் மாநில வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் கடன் பெறும் நிலை உருவாகியுள்ளது. சொத்துப் பதிவில் இழக்கும் வருவாய் மிகவும் அதிகமாக உள்ளது என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2021-இல் திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவித்தது என்ன?

மாநில வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.10.98 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

தமிழக நிதிநிலைமை குறித்து 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை! நிதியமைச்சா் மரிய வில்சன் பேட்டி
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை
