வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image

முதல்வர் விஜய் | எடப்பாடி பழனிசாமி - (கோப்புப் படம்)

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் தமிழ் நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா உள்ளிட்ட பத்து மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஜீவாதாரமாகவும் விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எனது தலைமையிலான, அம்மாவின் அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தொடர்ந்து, 1.6.2018 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத்தை மத்திய அரசு அறிவித்து, அதனை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது. இந்த ஆணையத்தின் பணிகளும், குழுவின் பணிகளும் முறையாக கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளன.

1. காவிரி நதிநீரைத் தேக்குதல், பகிர்மானம் செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்;

2. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் துணையுடன் அணைகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல் மற்றும் அவற்றில் இருந்து நீரை, பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துதல்;

3. கர்நாடகம் - தமிழ் நாடு எல்லையில் பிலிகுண்டுலு நீர் அளவை நிலையத்தில் கர்நாடக அரசு நீர் வழங்குதலைக் கண்காணிப்பது, இவற்றைத் தவிர வேறு பணிகள் எதுவும் மேற்கொள்ள இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை.

இந்நிலையில், கர்நாடகத்தில் சித்தராமையா முதல்வராக பதவி வகித்தபோது, துணை முதலமைச்சராகவும், நீர்பாசனத் துறைக்கு பொறுப்பு வகித்த, தற்போதைய முதலமைச்சர் D.K. சிவகுமார், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற காலந்தொட்டே மேக்கேதாட்டுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியதோடு, இந்த திட்டத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்தார்.

கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட, தயாரித்து அனுப்பிய திட்ட அறிக்கையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், மத்திய அரசு குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து 12.6.2026 அன்று கர்நாடக முதலமைச்சர் சுற்றுச் சூழல் அனுமதியைப் பெற, பாரதப் பிரதமரிடம் மீண்டும் நேரில் ஒரு அறிக்கையை வழங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீர் தீர்ப்பாயம் தனது 2007-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், காவிரி நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ உரிமை கிடையாது என்றும், கட்டமைப்புகள் ஏதேனும் மேற்கொள்ள வேண்டுமெனில், நதிநீர் பாயும் கீழ் மாநிலங்களின் ஒப்புதலோடு தான் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, காவிரி நீரை பயன்படுத்தும் கீழ்தட்டு மாநிலங்களான தமிழ் நாடு, கேரளம், புதுச்சேரி ஆகியவைகளின் ஒப்புதல் இன்றி காவிரியின் குறுக்கே எவ்வித கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே, கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எள் முனையளவுகூட இடம் அளிக்காமல், தமிழ் நாட்டின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாகத் தொடர்ந்து எடுக்க வேண்டுமென்று தமிழ் நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை, சென்ற மாதம் தில்லியில் நடைபெற்ற 51-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் அழுத்தம் தந்து, உரிய நீரைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தமிழகத்தின் பங்கு நீரைப் பெறாததால், மேட்டூர் அணையில் இருந்து இவ்வாண்டு ஜூன் 12 அன்று டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தாமலும் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமலும், ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமலும், மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீரை கர்நாடக காங்கிரஸ் அரசிடமிருந்து கேட்டுப் பெறாமலும், முதல் கோணல், முற்றும் கோணல் என்பதுபோல் ஆட்சியின் துவக்கத்திலேயே டெல்டா மாவட்ட விவசாயிகளை ஏமாற்றத்திற்கும், துன்பத்திற்கும் த.வெ.க. அரசு உள்ளாக்கியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களை தமிழக அமைச்சரவையில் சேர்த்து, அவர்களுக்கொரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த த.வெ.க. தலைவர், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மேக்கேதாட்டுவில் அணைகட்டுவதை தடுத்து நிறுத்தவும், தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெறவும் முயற்சிக்குமாறு த.வெ.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has accused the TVK government of remaining a mute spectator in the Mekedatu dam issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.