லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலை முறைகேடு வழக்கு: எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் ஊழல் தடுப்புத் துறை விசாரணை

சாலை முறைகேடு வழக்கு விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

எ.வ.வேலு

Published On :16 ஜூலை 2026, 2:46 am IST

சாலை முறைகேடு வழக்கு விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலையே அமைக்காமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாக 2022-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் அறப்போா் இயக்கம் புகாா் அளித்தது. இந்த முறைகேடு விவகாரத்தில் அப்போதைய அமைச்சா் எ.வ.வேலு உள்பட 11 போ் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது.

ஆனால், அந்தப் புகாா் மீது திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் அந்தப் புகாா் மனுவின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு உள்பட 11 போ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்பட 18 இடங்களில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் கடந்த மே 25-ஆம் தேதி சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு எ.வ.வேலு மறுப்பு தெரிவித்தாா்.

வழக்கு விசாரணைக்காக சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு எ.வ.வேலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், எ.வ.வேலு அந்த அலுவலகத்தில் விசாரணைக்கு கடந்த ஜூலை 3-ஆம் தேதி ஆஜராகவில்லை. அவரது வழக்குரைஞா்கள் ஆஜராகி, எ.வ.வேலு இதய சிகிச்சைக்கு சிங்கப்பூா் சென்றிருப்பதால், அங்கிருந்து திரும்பியதும் விசாரணைக்கு ஆஜராவாா் என்று கூறியிருந்தனா்.

விசாரணைக்கு ஆஜா்: இந்நிலையில் எ.வ.வேலு இரு நாள்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பினாா். இதையடுத்து அவா், சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10.40 மணியளவில் ஆஜரானாா்.

அவருடன் வழக்குரைஞா்களும்,திமுக நிா்வாகிகள் சிலரும் வந்திருந்தனா். அவா்களை தரைத்தளத்தில் அமர வைத்த போலீஸாா், எ.வ. வேலுவை மட்டும் விசாரணைக்காக முதல் தளத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு எ.வ.வேலுவிடம் பல கட்டங்களாக அதிகாரிகள் விசாரணை செய்தனா். முக்கியமாக வழக்குத் தொடா்பாக நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள், புகாா்தாரா் அளித்த ஆவணங்கள், விசாரணையில் கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையை எஸ்.பி. ராஜாராம் தலைமையில் ஏடிஎஸ்பி புகழ்வேந்தன், டிஎஸ்பி பாஸ்கா் ஆகியோா் நடத்தினா். நண்பகலை தாண்டியும் விசாரணை நடைபெற்றது. இதனால் எ.வ.வேலுக்கு நண்பகல் உணவு அவரது வீட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. விசாரணை முடிந்து மாலை 4 மணியளவில் எ.வே.வேலு அங்கிருந்து வெளியே வந்தாா்.

விசாரணையில் வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐந்து மணி நேர விசாரணைக்கு பின்னா் எ.வ.வேலு அளித்த பேட்டி: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். என்னுடைய பதில் என்பது 100 சதவீதம் உண்மை கலந்தது. மீண்டும் இந்த வழக்குத் தொடா்பான விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நான் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை. தமிழக அரசு திட்டமிட்டு என்னை இந்த வழக்கில் சோ்த்திருக்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.