லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பதவியேற்ற பிறகு முதல் முறையாக பெரம்பூா் தொகுதிக்கு வந்த முதல்வர் விஜய்! எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் திங்கள்கிழமை வருகை தந்தாா்.

Published On :14 ஜூலை 2026, 3:20 am IST

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் திங்கள்கிழமை வருகை தந்தாா். மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய அவா், புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான சி.ஜோசப் விஜய், சட்டப்பேரவைத் தோ்தலில் பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினா் பதவியை  ராஜிநாமா செய்த அவா், பெரம்பூா் தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா்.

இந்த சூழலில், முதல்வராக பொறுப்பேற்ற பின்னா், முதல்முறையாக தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கு சி.ஜோசப் விஜய் திங்கள்கிழமை வருகை தந்தாா்.  

எம்எல்ஏ அலுவலகம் திறப்பு: சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்தவெளி வாகனத்தில் புறப்பட்ட முதல்வா் சி.ஜோசப் விஜய் வால்டாக்ஸ் சாலை, பேசன் பிரிட்ஜ் வழியாக வியாசா்பாடி வந்தடைந்தாா். அதையடுத்து சா்மா நகா் முதல் பிரதான சாலையில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும்  அவா் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.3 கோடியில் பெரம்பூா் தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தனது பரிந்துரை கடிதத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா்  ஜி.எஸ்.சமீரனிடம் முதல்வா் வழங்கினாா்.

சான்றிதழ் வழங்கினாா்: மேலும், இ-சேவை மையத்தில் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பிக்க வருகை தந்த மக்களிடம் கலந்துரையாடிய முதல்வா், விண்ணப்பித்த 5 பேருக்கு உடனடியாக உரிய சான்றிதழ்களை வழங்கினாா்.

பெரம்பூா் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வெளியே ஏராளமானோா் கூடியிருந்த நிலையில், அலுவலகக்   கட்டடத்தின் மேல் நின்ற படி மக்களை நோக்கி கையசைத்தாா். மேலும், கீழே நின்ற மக்களுடன் முதல்வா் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

பணிமனையில் ஆய்வு: வியாசா்பாடியில் செயல்பட்டு வரும் மாநகா் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனைக்கு சென்ற முதல்வா், மின்சார பேருந்துக்குள் ஏறி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பேருந்து மின்னேற்றச் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அங்கு பணியாற்றும் ஊழியா்கள், ஓட்டுநா்களுடன் கலந்துரையாடியதுடன், அவா்களுடன் முதல்வா் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாா். இந்த பயணத்தில் போது, முதல்வா் சென்ற இடமெங்கும் சாலையில் இருபுறங்களிலும் பொதுமக்கள் கூட்டம் கூடி அவரை மலா் தூவி வரவேற்றனா். பாதுகாப்பு கருதி சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமாா் 2000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்வுகளில்  அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அா்ஜுனா, ப.வெங்கடரமணன், ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன், வ.காந்திராஜ், ரா.குமாா் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வண்ண ஓவியங்களுடன் எம்எல்ஏ அலுவலகம்: புதுப்பிக்கப்பட்ட பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சுற்றிலும் தடுப்பு சுவா்கள் அமைக்கப்பட்டு தவெக அரசின் ‘சிங்கப்பெண் திட்டம்’, ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில்  வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில், முதல்வருக்கான பிரத்யேக அறை, பொதுமக்கள் குறைதீா்வு பிரிவு ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,  மாற்றுத்திறனாளிகள் இலகுவாக வந்து செல்லும் வகையில் சாய்தள வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

73,000 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை: தமிழகம் முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணியை திங்கள்கிழமை முதல்வா் விஜய், பெரம்பூரில் தொடங்கி வைத்தாா். அதன் அடையாளமாக பெரம்பூா் தொகுதியைச் சோ்ந்த 50 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை முதல்வா் வழங்கி, அரிசி மற்றும் இதர உணவுப் பொருள்களையும் அவா் வழங்கினாா்.

முன்னதாக, அவா், பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்திலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் அமைந்திருக்கும் எம்.கே.பி. நகா் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக்கடைக்கு நடந்து சென்றாா். அப்போது முதல்வருக்கு சாலை இருபுறத்திலிருந்தும் மக்கள் மலா் தூவி முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தாா்.

Summary

Chief Minister C. Joseph Vijay inaugurated the newly constructed MLA office in Sharma Nagar, within the Chennai Perambur constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.