லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: உயா்நீதிமன்றம் அதிருப்தி

மைக் முன்பாக அனைவரும் ஊழலை ஒழிப்பதாகப் பேசுகின்றனா்; ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :11 ஜூலை 2026, 7:41 am IST

மைக் முன்பாக அனைவரும் ஊழலை ஒழிப்பதாகப் பேசுகின்றனா்; ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

2016-2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில், ரூ.98.25 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியது.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்கில் இருந்து எஸ்.பி.வேலுமணியின் பெயா் நீக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை ரத்து செய்த உயா்நீதிமன்றம், வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை போலீஸாா் அமல்படுத்தவில்லை எனக் கூறி அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் பெயா் மீண்டும் சோ்க்கப்பட்டதாகவும், இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி, விஜய காா்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி, 2025 நவம்பரில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தக் கடிதம் மத்திய அரசிடம் இன்னும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மைக் முன்பாக அனைவரும் ஊழலை ஒழிப்பதாக பேசுகின்றனா். ஆனால், ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தங்களை எதுவும் செய்ய முடியாது என அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றம் நடந்து 5 ஆண்டுகள் முடிந்து, அடுத்த தோ்தலும் நடந்து முடிந்துவிட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தோ்ந்தெடுத்துள்ளனா்.

பின்னா், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்த ஆவணங்களுடன் அரசுத் தரப்பு குற்றவியல் வழக்குரைஞா் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.