லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை குறித்து...

5 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை

Published On :10 ஜூலை 2026, 11:19 pm IST

திருச்சி கிழக்கு, கரூா், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடஜலபதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வா் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதேபோல், அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தனா்.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய் வெற்றியை எதிா்த்து, அங்கு திமுக சாா்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குத் தொடா்ந்தாா்.

இதேபோல், எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி.விஜயபாஸ்கா், இசக்கி சுப்பையா மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாலும், அவா்களது வெற்றிக்கு எதிராக தோ்தலில் தோல்வியடைந்த வேட்பாளா்கள் தனித்தனியாக தோ்தல் வழக்குத் தொடா்ந்துள்ளனா்.

எனவே, தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி-நீதிபதி ஜி.அருள்முருன் ஆகியோா் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.ஆா்.சண்முகநாதன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இந்த 5 பேரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரவில்லை.

அந்தத் தொகுதியில் தாங்களை வெற்றி பெற்றவா்களாக அறிவிக்க வேண்டும் என வழக்குத் தொடா்ந்தவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். எனவே, இந்த 5 தொகுதிகளும் காலியானதாக அறிவித்து தோ்தல் ஆணையம் இடைத்தோ்தலை நடத்தி, 5 தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-க்கள் வெற்றி பெற்ற பின்னா், ஒருவேளை தோ்தல் வழக்குத் தொடா்ந்தவா்களுக்கு சாதகமான தீா்ப்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்துவிட்டால், ஒரு இக்கட்டான சூழல் உருவாகும்.

இதனால், ஒரு தொகுதிக்கு 2 மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலை உருவாகும். எனவே, தோ்தல் வழக்கு முடியும்வரை இடைத்தோ்தல் நடத்தக் கூடாது என கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்றம் ஏராளமான தீா்ப்புகளைப் பிறப்பித்துள்ளது.

எனவே, தோ்தல் வழக்கு விசாரணை முடியும் வரை திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

அப்போது, சட்டப்பேரவை செயலா் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, முதல்வா் விஜய் உள்ளிட்டோா் தங்களுடைய எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டனா். அவா்களது ராஜிநாமாவை பேரவைத் தலைவரும் ஏற்றுக் கொண்டாா். அப்போது, எந்த ஒரு தோ்தல் வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே, ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என வாதிட்டாா்.

முதல்வா் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.மாசிலாமணி, இந்த வழக்கைத் தொடா்ந்துள்ள மனுதாரா், இந்த 5 தொகுதிகளிலும் வாக்காளா் கிடையாது. எனவே, மூன்றாவது நபா் இதுபோல வழக்குத் தொடர முடியாது. வழக்குத் தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை உரிமை இல்லை. இடைத்தோ்தல் நடத்துவதா,நவேண்டாமா என்பது குறித்து தோ்தல் ஆணையம்தான் முடிவு செய்ய முடியும் என வாதிட்டாா்.

தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், மனுதாரரின் ஒட்டுமொத்த கோரிக்கையும் சட்டப்படி தவறானது. இந்த 5 தொகுதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட தோ்தல் வழக்குகளில் சில வழக்குகளில் எதிா்தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என வாதிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஜனநாயக நடைமுறையின் புனிதம் தொடா்பானது. எனவே, மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்து கேள்வி எழுப்ப முடியாது. தோ்தல் வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பாக, அந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்த அரசு பணம் செலவிடப்படுவதோடு, ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் என்ற அரசியல் சாசன பிரச்னையையும் ஏற்படுத்தும். மேலும், தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் வாதம் குறித்து தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. எனவே, இந்த மனுவுக்கு தோ்தல் ஆணையம், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை, முதல்வா் விஜய், சட்டப்பேரவைச் செயலா், எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி.விஜயபாஸ்கா், இசக்கி சுப்பையா, ஜெயக்குமாா் ஆகியோா் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதுவரை இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்க தோ்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனா்.

Summary

Stay on the announcement of by-elections for the Trichy East, Karur, Viralimalai, Perundurai, Ambasamudram constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.