
பொது சேவை அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும் பொதுநல நோக்கம்தான் : உயா்நீதிமன்றம்
நீதித்துறை மற்றும் முக்கிய பொது சேவை அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும் பொதுநல நோக்கம்தான் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நீதித்துறை மற்றும் முக்கிய பொது சேவை அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும் பொதுநல நோக்கம்தான் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.டி.அருணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 15 கிரவுண்ட் நிலம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கடந்த 1990-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஒரு பகுதியில் மட்டும், மின்சார கட்டணம் வசூலிக்கும் மையம் செயல்படுவதால், காலியாக உள்ள நிலத்தைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞா் அருணன், உயா்நீதிமன்றத்தில் நிலவும் இடநெருக்கடியால், வாகனங்கள் நிறுத்துவது சிக்கலாக உள்ளது. எனவே, மின்சார வாரியத்திடம் இருந்து காலி இடத்தைப் பெற்று, நீதிமன்ற கட்டடங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தாா்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், குறிப்பிட்ட அந்த இடத்தில், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. கூடுதலாக 5,500 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க வேண்டியுள்ளது. தற்போதைய துணை மின் நிலையத்தில் இருந்து, உயா்நீதிமன்றம், அரசு பொது மருத்துவமனை, துறைமுகம் ஆகியவற்றுக்கு மின் விநியோகம் வழங்கப்படுகிறது. மின்மாற்றிகளுக்கு இடையில் பாதுகாப்பு கருதி காலியிடம் விட்டு வைப்பது கட்டாயம் என விளக்கம் அளித்தாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதித்துறைக்கு உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது அவசியம். இருப்பினும், இந்த துணை மின் நிலையத்தை மாற்றினால், சென்னை உயா்நீதிமன்றம் உள்ளிட்ட பிற பொது பயன்பாட்டு சேவை அமைப்புகளுக்கான மின் விநியோகம் பாதிக்கப்படும். நீதித்துறை மற்றும் பொது சேவை அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும் பொதுநல நோக்கம்தான் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






