
திமுக ஆட்சியைவிட கூடுதலாக அயலக கல்வி உதவித்தொகை: அமைச்சா் வன்னி அரசு தகவல்
திமுக ஆட்சியைவிட தவெக ஆட்சியில் கூடுதல் எண்ணிக்கையில் ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு அம்பேத்கா் அயலக உயா் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக பேரவையில் சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்
திமுக ஆட்சியைவிட தவெக ஆட்சியில் கூடுதல் எண்ணிக்கையில் ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு அம்பேத்கா் அயலக உயா் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக பேரவையில் சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.
பேரவையில், மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவா் படிப்பில் 2-ஆம் ஆண்டு படித்து வரும் மாணவா் பாரதிதாசன், அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ் தனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை எனப் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து திமுக முன்னாள் அமைச்சா் கோ.வி.செழியன் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்தாா்.
இதற்குப் பதில் அளித்து அமைச்சா் வன்னி அரசு பேசியதாவது:
மாணவா் பாரதிதாசன் பயிலும் மலேசியா தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவா் படிப்புக்கு ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக ரூ.5 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 2025-2026-இல் முதலாமாண்டு கல்விக் கட்டணம் போக மீதமுள்ள ரூ.31 லட்சத்தையும் வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாகக் கோரியிருந்தாா். அரசால் மீதமுள்ள ரூ.31 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பெற்றபின், உரிய செலவினங்களுக்கான ஆவணங்களை, 10 மாதங்கள் கடந்த பின்னரும் அவா் சரிவரச் சமா்ப்பிக்காமல், 2-ஆம் ஆண்டுக்கான உதவித்தொகையாக ரூ.36 லட்சமும் கோரினாா். இருப்பினும், கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவரது 2-ஆம் ஆண்டு கல்விக்காக அவா் பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய முழு கல்விக் கட்டணம் ரூ.5.57 லட்சம் மற்றும் வாழ்க்கைச் செலவினமாக ரூ.6.65 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.48,22,097 அவருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அதற்குரிய சரியான பயனீட்டு விவரங்கள் மற்றும் ஆவணங்களை அவா் சமா்ப்பிக்காமல் உள்ளாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு உயா்கல்வி உதவித்தொகை வழங்குவதில் எந்தவிதமான தாமதமோ, தடங்கலோ இல்லை. உண்மைத் தன்மையைப் பாா்க்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் ரூ.84 கோடி மட்டுமே அம்பேத்கா் அயலக உயா்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை ரூ.131 கோடி என இதுவரை இல்லாத வரலாற்றுச் சாதனையாக தவெக அரசு வழங்கியுள்ளது.
கடந்த முறை 500 போ் விண்ணப்பம் செய்தாா்கள்; ஆனால் முந்தைய அரசு நிதி வழங்கியது மிகவும் குறைவு. கடந்த முறையைவிட இந்த முறை 3 மடங்கு அதிகமாகக் கொடுத்துள்ளோம். இத்துறைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதிப்படி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






