
13 மாவட்டங்களில் 15 புதிய சேமிப்பு கிடங்குகள்: உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் அறிவிப்பு
செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கோவை, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 31,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ.81. 60 கோடியில் அமைக்கப்படும்

அமைச்சர் ப. வெங்கடரமணன் - படம்: சட்டப்பேரவை
செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கோவை, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 31,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ.81. 60 கோடியில் அமைக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் அறிவித்தாா்.
பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிறகு அவா் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
உணவு தானியங்களை சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கரூா், கோவை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூா், சேலம், கடலூா், காஞ்சிபுரம், சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களில் 31,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ.81.60 கோடியில் கட்டப்படும்.
-அரியலூா், நாமக்கல் மற்றும் மேட்டுப்பாளையம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தலா 3,400 டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன சேமிப்பு கிடங்குகள் ரூ.13 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படும்.
- தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 10 சேமிப்பு கிடங்கு வளாகங்களில், தொழிலாளா் ஓய்வறை வசதி, ரூ.1 கோடியே 89 லட்சத்தில் ஏற்படுத்தப்படும்.
- தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 17 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் ரூ.12 கோடியே 61 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 18 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் வைக்கப்படும் தானியங்களின் முழு நேர கண்காணிப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் ரூ.1.25 கோடியில் பொருத்தப்படும்.
- உணவு தானியங்களின் தரத்தை உறுதி செய்யும் பொருட்டு, அவற்றை அடுக்கி வைக்கும்போது தரை வழி ஈரப்பதம் தாக்காமல் இருக்கவும், காற்றோட்ட வசதிக்காகவும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 12 சேமிப்பு கிடங்குகளுக்கு 6,000 எண்ணிக்கை அட்டிக் கட்டைகள் ரூ.1.44 கோடியில் வழங்கப்படும்.”
- அரைவை ஆலைகளிலிருந்து பெறப்படும் அரிசியின் தரம், மூட்டைகளின் தடமறிய ஒவ்வொரு மூட்டைக்கும் ‘க்யூஆா் கோடு’ முறை அறிமுகம் செய்யப்படும்.
- செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி இருப்பு கண்காணிப்பு அமைப்பு ரூ.50 லட்சத்தில் உருவாக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






