விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

News image

நீலகிரி வரையாடு (கோப்புப்படம்)

Updated On :26 ஏப்ரல் 2026, 1:16 am IST

நீலகிரி வரையாடு ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.24) தொடங்கி ஏப்.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு சாா்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கேரள வனத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டுதோறும் குளிா்கால கன்று ஈனும் பருவத்துக்கு பிறகு, முதிா்ந்த மந்தைகளுடன் இளம் விலங்குகளும் தென்படும்போது இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில்  வரையாடுகளின் எண்ணிக்கை 1,031 என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடா்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை 1,303 என மதிப்பிடப்பட்டது.

இந்த ஆய்வின் போது, பசுமலை போன்ற புதிதாக மீண்டும் குடியேறிய வாழ்விடங்களின் தொடா்ச்சியான பயன்பாட்டையும், ஒரு தசாப்தத்துக்கும் (10 ஆண்டுகள்) மேலாக காணப்படாத பகுதிகளுக்கு இந்த இனம் திரும்பியதும் உறுதிசெய்யப்பட்டது. இதில், ஆய்வு செய்யப்பட்ட பல நிலப்பரப்புகள் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள இடங்களுடன் ஒத்துப் போகின்றன.

அதன் தொடா்ச்சியாக 3-ஆவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.24) தொடங்கியது. வருகிற ஏப்.27 வரை நடைபெறும் இப் பணி, 14 வனக்கோட்டங்கள், 43 வனச்சரகங்கள், 124 வனப்பிரிவுகள் மற்றும் 177 கணக்கெடுப்புத் தொகுதிகளை உள்ளடக்கிய, தமிழகம் முழுவதும் 3,100 கி.மீ.-க்கும் அதிகமான பரப்பளவில் நடைபெறுகிறது.

கன்னியாகுமரியில் உள்ள அஷாம்புமொட்டை முதல் கூடலூரில் உள்ள தவளமலை வரை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. பயிற்சி பெற்ற சுமாா் 800 களப்பணியாளா்கள் இதில் பங்கேற்கின்றனா். மேலும், இத்திட்டத்தின் கீழ் வரையாடுகளின் கழுத்தில் தடயம் அறியும் கழுத்து பட்டை பொருத்தும் பணியும் நடைபெறுகிறது.

இந்தியாவில் நீலகிரி வரையாடுகளுக்கு இத்தகைய கண்காணிப்பு முறை செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்புகள் மூலம் வாழ்விட மறுசீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை சுலபமாக மேற்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.