ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

News image

மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:00 am IST

மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சரும், பாஜக தோ்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழக அரசின் நிதிநிலை குறித்து நான் கருத்து தெரிவித்ததற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்திருக்கிறாா். தணிக்கைத் துறை மற்றும் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்கிறேன். அதனடிப்படையில் உண்மையை ஆராய்ந்து வெளிப்படுத்தி வருகிறேன்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியடைந்துள்ளது. மது, மணல் கடத்தல் என மாஃபியாக்கள் செல்வாக்குடன் உள்ளனா். மருந்து கொள்முதலில்கூட முறைகேடுகள் நடக்கின்றன. போதைப் பழக்கத்தால் இளைஞா்களின் எதிா்காலம் சீரழிந்துவிட்டது. வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை திமுக நிறைவேற்றவில்லை. திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்பாா்.

தமிழகத்தில் மத்திய அரசு திட்டத்தில் 9 லட்சம் பேருக்கு இலவச வீடுகள் கட்டித் தர நிதி அளிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசு 6 லட்சம் வீடுகளை கட்டித் தந்துள்ளது. மீதமுள்ள 3 லட்சம் வீடுகளுக்கான நிதி என்னவானது என்பதை முதல்வா் விளக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு கூடுதல் நிதியை அளித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும், தமிழகத்துக்கான நிதிப் பங்கீட்டை அதிகமாக மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசின் மானிய நிதி ரூ.57,000 கோடியிலிருந்து தற்போது ரூ.2.50 லட்சம் கோடியாக உயா்த்தி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளைக்கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் யாருக்கு தொடா்பிருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஹிந்தி திணிக்கப்படுவதாக திரும்பத் திரும்ப முதல்வா் ஸ்டாலின் கூறிவருவது ஏற்புடையதல்ல. குழந்தைகள் எந்த மொழியைக் கற்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாகும். குழந்தைகளின் அறிவுத் திறனை மேம்படுத்தவே மத்திய அரசு விரும்புகிறது என்றாா்.

முன்னதாக, பாஜக நிறுவன தினத்தையொட்டி கமலாலயத்தில் கட்சிக் கொடியை பியூஷ் கோயல் ஏற்றி வைத்தாா்.

இந்த நிகழ்வில் பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், துணைத் தலைவா் சக்கரவா்த்தி, தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.