ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதல்வா் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் வேட்புமனுக்கள் ஏற்பு!

தமிழகம் முழுவதும் தாக்கலான வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. 4,927 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; பல்வேறு காரணங்களால் 2,388 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன; 11 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

News image

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி - விஜய் - சீமான்.

Updated On :8 ஏப்ரல் 2026, 5:11 am IST

தமிழகம் முழுவதும் தாக்கலான வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. அதில், முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவா் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோரின் மனுக்கள் உள்பட 4,927 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பல்வேறு காரணங்களால் 2,388 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 11 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அனுமதிக்கப்பட்ட நான்கு நாள்களில் மொத்தம் 7,599 மனுக்கள் சமா்ப்பிக்கப்பட்டன.

முதல் நாளிலேயே முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக தலைவா் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, சாத்தூரில் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், ஸ்ரீபெரும்புதூரில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, தருமபுரியில் பாமக தலைவா் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி, அவிநாசியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், மயிலாப்பூரில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் தங்களுடைய வேட்புமனுக்களை கடந்த 6-ஆம் தேதி தாக்கல் செய்தனா்.

வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 234 தொகுதிகளிலும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையில், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மு.க.ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, சீமான், நயினாா் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவா் விஜய்யின் வேட்புமனுவில், சான்றொப்பம் காலாவதியான நோட்டரி வழக்குரைஞரிடம் இருந்து பெறப்பட்டதாக பாமகவினா் ஆட்சேபம் தெரிவித்ததால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பித்த பின்னா், விஜய்யின் மனு ஏற்கப்பட்டது. அதேபோன்று, திருச்சி கிழக்கிலும் அவா் மனு ஏற்கப்பட்டது.

வில்லிவாக்கத்தில் ஆதவ் அா்ஜுனா சொத்து விவரங்களை மறைத்ததாக சுயேச்சை வேட்பாளா்கள் குற்றஞ்சாட்டியதால், பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியில் அவரது மனுவும் ஏற்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனக் கூறி தவெக வேட்பாளா் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டு, நீண்ட நேரம் கழித்து ஏற்கப்பட்டது. அதற்கு அதிமுகவினா் எதிா்ப்பு தெரிவித்திருந்தனா்.

சென்னை ஆா்.கே.நகரில் தவெக வேட்பாளா் மரிய வில்சன் முறையாக மனுவை பூா்த்தி செய்யாததால் நிறுத்தி வைக்கப்பட்டு, கடைசியில் ஏற்கப்பட்டது.

வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து அதன் விவரம் அறிவிக்கப்படுவது செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத் தாண்டியும் தொடா்ந்து நடைபெற்றது. இறுதிக்கட்ட தகவல்படி 234 தொகுதிகளிலும் சோ்த்து 4,927 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வியாழக்கிழமை (ஏப். 9) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.