குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

நாடாளுமன்றத்தை இழந்த டிரம்ப்! அடுத்த 2 ஆண்டுகளை எப்படி சமாளிக்கப் போகிறார்?

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி படுதோல்வியடைந்தது பற்றி...

Donald Trump

டொனால்ட் டிரம்ப் - AP

Published On :4 நவம்பர் 2026, 3:47 pm IST

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இழந்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு ஆண்டு கால ஆட்சியை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் இருப்பது போன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் அவை (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் அவை (கீழவை) உள்ளன.

இதில், 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் அவைக்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் அவையின் பதவிக்காலம் 6 ஆண்டுகள், மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

(அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த தேர்தலில் அமெரிக்க மக்கள் நேரடியாக அதிபர் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்)

இந்த நிலையில், 435 பிரதிநிதிகள் அவை இடங்களுக்கும், 35 செனட் அவை இடங்களுக்கும், இத்துடன், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது.

நவ. 3 மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 231 இடங்களிலும், குடியரசுக் கட்சி 144 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதிநிதிகள் அவையை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது. (இந்திய நேரப்படி மாலை 3 மணி நிலவரம்)

செனட் அவையில் 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 20 இடங்களிலும், குடியரசுக் கட்சி 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதன்மூலம், பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 54 இடங்களிலும் குடியரசுக் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், செனட் அவையையும் எதிர்க்கட்சி கைப்பற்றி டிரம்ப்புக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

வரலாற்று வெற்றி

  • ஆளும் குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட கான்சஸ், டெக்சாஸ் மற்றும் தென் கரோலினா ஆகிய மாகாணங்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

  • கான்சஸில் ரோஜர் மார்ஷலைத் தோற்கடித்து, பாஸ்டர் ஆடம் ஹாமில்டன் ஜனநாயகக் கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திடாத வெற்றியைப் பெற்றுத் தந்தார். இது 94 ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி. 

  • நியூ ஹாம்ப்ஷயரில் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட தன்பாலின ஈர்ப்பாளரான கிறிஸ் பாப்பாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

  • ஜார்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க மாகாணத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின பெண் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

  • மிச்சிகன் மாகாண செனட் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றார். இவர், அமெரிக்க செனட் அவைக்கு தேர்வாகும் முதல் முஸ்லிம் ஆவார்.

  • ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய அமெரிக்க தொழிலதிபரான விவேக் ராமசுவாமி தோல்வி அடைந்தார்.

செனட், பிரநிதிகள் அவைகள் அதிகாரம்

அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி விலகத் தேவையில்லை.

ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரமும், அரசுத் துறைகளுக்கு நிதி விடுவிக்கும் அதிகாரமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் மற்றும் பிரதிநிதிகள் அவைகளுக்கே உள்ளன. அமெரிக்காவின் என்ஜின் போல் இரு அவைகளும் செயல்படும்.

இந்தச் சூழலில், இரு அவைகளிலும் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில், அதிபர் டிரம்ப்பால் ஜனநாயகக் கட்சியின் ஆதரவின்றி எதையும் செய்ய முடியாது.

டிரம்ப்பை பதவி நீக்க முடியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிபராகியுள்ளார். செனட் மற்றும் பிரதிநிகள் அவைகளில் பெரும்பான்மை இருப்பதால் மட்டுமே ஜனநாயகக் கட்சியால் அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது.

இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி (Impeachment) பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான அதிகாரத்தை பிரதிநிதிகள் அவை கொண்டுள்ளது. இந்த அவையில் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிமானோரின் (218) ஆதரவு இருந்தால் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.

தொடர்ந்து, அந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து செனட் அவை தீர்ப்பளிக்கும். அந்த தீர்ப்புக்கு ஆதரவாக செனட்டின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படும் அமெரிக்க அதிபரால் எதிர்காலத்தில் எந்தவொரு கூட்டாட்சிப் பதவியும் வகிக்க முடியாது.

அமெரிக்க அதிபராக முதல்முறையாக டிரம்ப் பதவி வகித்த போது, அவருக்கு எதிராக இருமுறை பிரதிநிதிகள் அவை தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், இருமுறையும் செனட் அவையில் 2/3 பெரும்பான்மை கிடைக்காததால் நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

டிரம்ப்பின் அடுத்த நகர்வு என்ன?

அமெரிக்க இடைக்கால தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்ட அதிபர் டிரம்ப், “நாங்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால் நாங்கள் இமாலய வெற்றி பெற்றிருப்போம்” என்று ட்ரூத் சோசியலில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபருக்கான சிறப்பு அதிகாரமான ‘வீட்டோ’வைத் தான் பயன்படுத்தவுள்ளதை குறிக்கும் வகையில் ’வீட்டோ’ என்று அச்சிடப்பட்ட தொப்பியை டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றாலும், அவர்கள் நிறைவேற்றும் சட்டத்துக்கு அதிபரான டிரம்ப் ஒப்புதல் அளிக்காமல், ’வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ய முடியும். அதைதான் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

(கடந்த முறை அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது, அமெரிக்க நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட 10 சட்டங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தார்)

ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி அடுத்த இரண்டு ஆண்டுகள் அதிபராக டிரம்ப்பால் எதையும் செய்ய முடியாது.

இஸ்ரேல், உக்ரைன் போன்ற நாடுகளின் போர்களுக்கு நிதி விடுவிப்பது, ஆயுதம் வழங்குவது, பிற நாடுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது, இறக்குமதி வரி விதிப்பது போன்ற நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி டிரம்ப்பால் இனி செய்ய முடியாது.

மறுபுறம், பெரும்பான்மை பலமுடைய ஜனநாயகக் கட்சியை செயல்பட விடாமல், தனது அதிகாரத்தை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியுமா, அவை அனைத்தையும் உறுதியாக டிரம்ப் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரத்தை இழந்த டிரம்ப், அடுத்த இரண்டு ஆண்டுகள் எப்படி ஆட்சி செய்யப் போகிறார்? நாடாளுமன்றத்தை கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சி, டிரம்ப்பின் இடையூறுகளை எப்படி சமாளிக்கப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.