பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

காவிரிக் கரையில் ஒரு கால்பந்து வரலாறு!

காவிரிக் கரையில் கால்பந்து பயிற்சி அளிக்கும் திருச்சி முத்தரசநல்லூரைச் சேர்ந்த எம். தனபால் பற்றி...

tricjy football

கால்பந்து பயிற்சி அளிக்கும் தனபால், அவரது மகன் பிரகதீஷ் . - Dinamani

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:01 pm IST

உலகின் அதிக பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டாகவும், ஒரு பந்தை உற்றுநோக்கி ஒட்டுமொத்த உலகமும் சுற்றி வரச் செய்யும் சக்திமிக்க விளையாட்டாகவும் அமைந்துதான் கால்பந்து. பார்வையாளர்களின் நாடி, நரம்புகளை முறுக்கேறச் செய்யும் ஆற்றல் இந்த விளையாட்டுக்கு கூடுதல் என்பதை மறுப்பதற்கில்லை. மைதானத்தில் அமர்ந்து விளையாட்டை வேடிக்கை பார்க்கும் கண்கள் அனைத்தும், கால்பந்தின் பின்னாடியே ஓடுகின்றன. அந்த பந்து யாருடைய கால்களில் எப்போது சுழன்று கோலாகப்போகிறது என்று யாரும் அறியமுடியாது. இங்கிலாந்து நாட்டில்தான் 19ஆம் நூற்றாண்டில் கால்பந்தின் நவீன வடிவம் கட்டமைக்கப்பட்டது. 1930இல் முதல் உலகக் கோப்பை போட்டி உருகுவே நாட்டில் நடைபெற்றது. இன்று இண்டு, இடுக்கெல்லாம் வயது வித்தியாசமின்றி கால்களுக்குள் சுழன்று வருகிறது.

அகண்ட காவிரியில் தண்ணீர் இன்றி காணப்படும் மணல் மைதானத்திலும் ஞாயிற்றுக்கிழமை தவறாது கால்பந்து ஓட்டத்தை காணமுடிகிறது. வியர்வை படிந்த முதுகில் ஒட்டியுள்ள ஜெர்சிகளுடன், 22 ஜோடி கால்கள் ஒரு கால்பந்தைத் துரத்திச் செல்கின்றன. ஒரு நடுக்கள வீரர் தடுப்பாட்ட வீரரைக் கடந்து செல்கிறார், ஒரு முன்கள வீரர் தன் காலைச் சுழற்ற, பந்து கோல் கம்பத்திற்குள் பறந்து செல்கிறது. அடுத்த விநாடியே கோல் எனும் கூக்குரல் விண்ணை நோக்கி உயருகிறது. அரசுப் பேருந்தில் வாழ்நாளில் பெரும்பகுதி ஓடி களைத்த கால்களுக்கு, ஓய்வுக்குப் பிறகும் ஓய்வு தரமால், கால்பந்தை கனவாகக் கொண்ட வீரர்களுக்காக களமாடி வருகிறார் திருச்சி முத்தரசநல்லூரைச் சேர்ந்த எம். தனபால் (64). ஐடிஐ சான்றிதழ் படிப்பை முடித்து, கால்பந்து விளையாட்டுத் திறனால் அரசுப் பேருந்தில் வேலைக்குச் சேர்ந்தவர்தான் இவர். தாய் 8 அடி என்றால் குட்டி 16 அடி பாயும் என்பதைப் போல, தந்தைக்கு துணையாக அவரது மகன் டி. பிரகதீஷ் (30) கண்ணும், கருத்துமாக கால்பந்து வீரர்களை தயார்படுத்துவதில் பம்பரம்போல பணியாற்றி வருகிறார்.

எம். தனபால், டி. பிரகதீஷ்

எம். தனபால், டி. பிரகதீஷ்

தொடக்கத்தில் தனி ஆளாக கால்பந்துடன், வறண்ட காவிரியில் பிரகதீஷின் கால்களே முதலில் பதிந்தன. பின்னர், அந்த இரு கால்களுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இணைந்து கொண்டனர். பின்னர், ஒவ்வொருவரும் தனது நண்பர்களையும் அழைத்து வர இன்று 40-க்கும் மேற்பட்டோர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடி விளையாடும் பயிற்சி மையமாக மாறிவிட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர், மாணவிகள், பணித்தளங்களுக்கு செல்லும் பணியாளர்கள் காலை 6 மணிக்கே இங்கு வந்து பயிற்சி எடுத்து செல்வதை வழக்கமாகிக் கொண்டனர். வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை கோல் விளையாட்டு கட்டாயமாகிப் போனது. பல்வேறு நாடுகளின் லீக் போட்டிகளில் பங்கேற்ற பிரகதீஷுக்கு, கால்பந்து கிளப் தொடங்கும் எண்ணமே இல்லாமல் இருந்தது. கரோனா பெருந்தொற்று காலத்தில் தனக்கு கிடைத்த நேரத்தை பிறருக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொண்டு, தனது தந்தை உதவியுடன் கால்பந்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இது நண்பர்கள், அருகாமை கிராமத்தினர் என அப்படியே பரவி திருச்சி மாநகர இளைஞர்களையும் முத்தரசநல்லூர் காவிரிக் கரைக்கு இழுத்து வரும் நிலையை உருவாக்கிவிட்டது. இப்போது, சிறந்த கால்பந்தாட்ட பயிற்சி களமாக தந்தையும், மகனும் இணைந்து உருமாற்றினர்.

இருப்பினும், பயிற்சிக்கான நிரந்தரமான இடத்தைக் கண்டறிவதே அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இவர்களின் முயற்சியைப் பாராட்டிய உள்ளூர் கோயில் நிர்வாகம் ஒன்று, கோயிலுக்குச் சொந்தமான காலியான நிலம் ஒன்றை எவ்விதக் கட்டணமுமின்றிப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. தனபாலும் பிரகதீஷும் படிப்படியாக அந்த நிலத்தைச் சமப்படுத்தினர்.

பொதுவாக, குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள் எளிதில் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் வளரும்போது, இடவசதி இல்லாத காரணத்தால் பலர் விளையாடுவதை நிறுத்திவிடுகின்றனர் இந்த நிலையை மாற்ற இருவரும் விரும்பியதன் விளைவே கால்பந்துக்கான பயிற்சி மைதானத்தை கண்டறிய வழிவகுத்தது. இதுவே இன்று முத்தரசநல்லூர் கால்பந்து கிளப் என்ற பெயருடன், 7 பேர் கொண்ட அணிகள் மோதும் விளையாட்டு மைதானமாகவும் மாறியுள்ளது. இங்குதான் வார இறுதி நாள்களில் 16 வயதுக்கு முற்பட்டவர்களுக்கு இலவசமாகவும், முறையாகவும் கால்பந்து பயிற்சி கற்றுத்தரப்படுகிறது.

Story image

இதுதொடர்பாக, எம். தனபால் கூறுகையில், கிராமங்களில் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டு வசதிகள் அவரவர் இருப்பிடத்திலேயே எளிதில் கிடைத்து விடும். ஆனால், அதே குழன்தைகள் வளரும்போது, போதிய இடவசதி இல்லாததால் பலரும் தங்களது விருப்பமான விளையாட்டை விளையாடுவதை நிறுத்திவிடுகின்றனர். அந்த நிலையை மாற்றவே எங்களது கிளப் உருவாகியுள்ளது. இங்கு பயிற்சி பெறுபவர்களில் பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்கள் ஆவர்; இவர்களால் வார நாட்களில் மைதானத்தில் நேரத்தைச் செலவிட முடிவதில்லை. அவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்கிறோம், பயிற்சி பெற விரும்புவோரும் வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்களை தங்களது பயிற்சி நாள்களாக மாற்றிக் கொண்டு தவறாது வந்துவிடுகின்றனர். இதுதான் எங்களை மேலும், கால்களில் உதைபட்டுச் செல்லும் கால்பந்துபோல புயல் வேகத்தில் இயங்கச் செய்கிறது என்றார்.

இலவசமாக பயிற்சி மையத்தை நடத்துவது சவாலானது. எனவேதான், திருச்சியில் உள்ள பிற கிளப், பள்ளிகள், மைதானத்துக்கு சென்று தந்தை மகன் இருவரும் பயிற்சி அளித்து, அதில் கிடைக்கும் வருவாயின் பெரும்பகுதியை இந்த இலவச பயிற்சி மையத்துக்கு செலவிடுகின்றனர்.

Story image

இதுதொடர்பாக பிரகதீஷ் கூறுகையில், திருச்சி ஒரு காலத்தில் கால்பந்து கலாசாரத்தில் தனித்துவ அடையாளமாக இருந்ததாக எனது தந்தை அடிக்கடி கூறுவதுண்டு. எங்களிடம் பயிற்சி பெற்ற பலரும் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் மத்திய, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு வாய்ப்பைப் பெற்றுள்ளனர். பலர், எங்களைப் போன்றே பயிற்றுநர்களாக மாறி, பயிற்சி அளித்து வருவாய் ஈட்டுகின்றனர். கால்பந்து விளையாட்டின் மூலம் ஒழுக்கம், நேரம் தவறாமை, குழுப்பணி, பொறுப்புணர்ச்சி ஆகியவற்றை கற்றுக்கொள்ள முடியும். அவற்றை வாழ்க்கையிலும் கடைப்பிடித்தால் சாதனையை வசமாக்க முடியும். உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் ஒரே நாளில் இந்த உயரத்துக்கு வரவில்லை. பல ஆண்டுகளாக தொடர் பயிற்சி அதனை சாத்தியமாக்கியுள்ளது. எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் பலரும் உள்ளூர் லீக் போட்டிகளில் பல்வேறு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். மேலும், சிலர் கால்பந்து விளையாட்டைத் தொழில்முறையாகத் தொடர்ந்து கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் லீக் போட்டிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் லீக் போட்டிகள் வரை தங்களது பயணத்தை நீடித்து கொண்டு வருகின்றனர். திறமையான வீரர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற சிறுவர்கள், இப்போது தாங்களே சின்னஞ்சிறு குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கிறார்கள். கால்பந்து மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள்; இது எங்களுக்குப் பெருமைக்குரிய விஷயம் என்கிறார் பிரகதீஷ்.

Summary

A football history on the banks of the Cauvery!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.