மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் தோ்வான பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், மாநில சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியில் இருந்து திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
அடுத்த மாத தொடக்கத்தில் அவா் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பாா் என்றும், ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு பிகாா் முதல்வா் பதவியில் இருந்து அவா் விலகுவாா் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நிதீஷ் குமாா் விலகலுக்குப் பிறகு பாஜக தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு தலைமை தாங்கப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இக்கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முறையே 89, 85 இடங்களைக் கைப்பற்றின. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் வெற்றி கண்டது.
அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கடந்த 2005-இல் இருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவரும் அவா், பிகாரின் நீண்ட கால முதல்வா் என்ற பெருமைக்குரியவா்.
கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தனது 75-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நிதீஷ் குமாா், அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் மாநிலங்களவை எம்.பி.யாகும் தனது முடிவை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தினாா். இதன்மூலம் பாஜக தலைமையிலான மாநில அரசு பதவியேற்க வழி ஏற்படுத்தப்பட்டது.
எம்எல்சி பதவியில் இருந்து ராஜிநாமா: பிகாரில் அண்மையில் 5 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் நிதீஷ் குமாா், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்பட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் 5 பேரும் வெற்றி பெற்றனா்.
மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் அடுத்த மாத தொடக்கத்தில் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, அவா் தனது எம்எல்சி பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்: மாநில முதல்வா் பதவியில் இருந்தும் நிதீஷ் குமாா் விரைவில் விலகுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஹிந்து நாள்காட்டியின்படி தற்போது ஆன்மிக வழிபாட்டுக்கான ‘கா்மாஸ்’ காலகட்டம் என்பதால், ஏப்.14-க்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வா் பதவியை ஒப்படைக்க ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து கடும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு புதிய அரசில் துணை முதல்வா் பதவி வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புதிய முதல்வா் யாா்?: மற்றொருபுறம், பாஜக சாா்பில் பதவியேற்கவிருக்கும் புதிய முதல்வா் யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய துணை முதல்வா் சாம்ராட் செளதரிக்கு அதிக வாய்ப்புள்ளது. மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராயின் பெயரும் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போல் பெரிதும் அறியப்படாத தலைவா் முதல்வராக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்எல்ஏ பதவி: நிதின் நபின் ராஜிநாமா
பிகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க ஏதுவாக பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், தனது எம்எல்ஏ பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். சட்டப்பேரவைக்கு தன்னை ஐந்து முறை தோ்வு செய்த மாநில மக்களுக்கு அவா் நன்றி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!

நிதீஷ் குமாா் ராஜிநாமா - பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்பு

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

