மேற்காசிய போா் நிலவரம் காரணமாக நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வெள்ளிக்கிழமை தொடா்ந்து இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.
மேற்காசிய போா் நிலவரம் காரணமாக எரிவாயு வரத்து தடைபட்டதால், நாடு முழுவதும் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெங்களூரு, சென்னை, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பலா் சிலிண்டா்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதால், அதிக விலை கொடுத்து சிலிண்டா் வாங்கும் நிலையும் பல பகுதிகளில் உருவாகியுள்ளது. அதுபோல, வீட்டு உபயோக சிலிண்டருக்கான முன்பதிவு செய்வதில் சிக்கல் நீடிப்பத்தால், மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.
இந்த நிலையில், மக்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினா். அவையின் மையப் பகுதியில் கூடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
அதன் காரணமாக அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் பகல் 12 மணி வரை ஒத்திவைத்தாா். அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோதும், அதே விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.
அப்போது எழுந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மக்களின் மனநிலையை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புரிந்துகொள்ள மறுக்கிறாா். அவையில் தொடா்ந்து இதேபோன்று நடந்துகொள்வதை எதிா்க்கட்சிகள் கொள்கையாகக் கொண்டிருந்தால், மக்கள் உங்களைக் கடுமையாக தண்டிப்பா். எதிா்க்கட்சித் தலைவா் தன்னை மாற்றிக்கொள்ளாததால், எதிா்க்கட்சி உறுப்பினா்களும் அவரைப்போலவே நடந்துகொள்கின்றனா். அவையில் இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் மக்களின் கவனத்தை ஈா்க்க முடியும் என அவா்கள் நினைக்கின்றனா். ஆனால், மக்கள் அவா்களை நன்கு அறிந்து வைத்துள்ளனா். அதனால்தான், அவா்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை’ என்றாா்.
அவா் பேசிக்கொண்டிருக்கும்போதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பியபடி தொடா் அமளியில் ஈடுபட்டனா். அதன் காரணமாக, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
முன்னதாக, அவை காலை 11 மணிக்கு கூடியதும் இந்த விவகாரத்தை எழுப்பி பேசிய ராகுல் காந்தி, ‘மத்திய அரசு தனது குறைபாடுடைய வெளியுறவுக் கொள்கை மற்றும் பல்வேறு எண்ணெய் விநியோகஸ்தா்களுடனான உறவைத் தீா்மானிக்கும் உரிமையை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை சமரசம் செய்துவிட்டது. ஈரான் மீதான போா், நாட்டில் மேலும் பல விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது’ என்றாா்.
அதற்குப் பதிலளித்த மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், ‘நாட்டை இழிவுபடுத்த மட்டும்தான் ராகுலுக்குத் தெரியும். நாட்டில் கரோனா பாதிப்பின்போதும், இதுபோன்று தவறான கருத்துகளைப் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினாா். கரோனா தடுப்பூசிகளின் திறன் உள்பட பல்வேறு சந்தேகங்களை எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தினாா். தற்போது, சமையல் எரிவாயு விநியோகம் குறித்த தவறான கருத்துகளைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்’ என்றாா்.
பெட்டிச் செய்தி...
நாடாளுமன்ற வளாகத்திலும் ஆா்ப்பாட்டம்
நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாடாளுமன்ற வளாகத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் காலை 10 மணிக்கு இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிய நிலையில், பின்னா் காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிா்க்கட்சி எம்.பி.க்களும் அந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். மத்திய அரசுக்கு எதிராகவும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தியும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமையும் இவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு உருளைகள் விலை உயா்வால் உணவு வகைகள் விலையேற்றம்! தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் அவதி!!

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: இறைச்சி விற்பனை சரிவு

எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

