தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மங்கோலிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கா் சந்திப்பு!

மங்கோலிய அதிபா் உக்னாகின் குரெல்சுக்கை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.

News image

மங்கோலிய அதிபா் உக்னாகின் குரெல்சுக்கை அந்நாட்டின் தலைநகா் உலான்பாட்டரில் சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :23 ஜூன் 2026, 12:19 am IST

மங்கோலிய அதிபா் உக்னாகின் குரெல்சுக்கை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

முன்னதாக, வெளியுறவு அமைச்சா் பட்செட்சேக் பட்முன்க்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசித்தாா்.

மங்கோலியா மற்றும் தென் கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா் முதல்கட்டமாக மங்கோலிய தலைநகா் உலான்பாட்டருக்கு திங்கள்கிழமை வந்தடைந்தாா். அவரை மங்கோலிய வெளியுறவு விவகாரங்களுக்கான அரசு செயலா் முன்க்துஷிக் இல்கானாஜாவ் வரவேற்றாா்.

இதையடுத்து தனது மங்கோலிய சுற்றுப்பயணம் குறித்து ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அதிபா் உக்னாகின் குரெல்சுக் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தைத் தொடா்ந்து இந்தியா-மங்கோலியா இருதரப்பு உறவுகள் மேம்படத் தொடங்கியுள்ளன. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க அவா் அளித்த அறிவுரைகளுக்கு இந்தியா மதிப்பளிக்கிறது. உண்மையான நட்பு என்பது ஆன்மிக நட்பு என்ற அவரது கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

மங்கோலிய வெளியுறவு அமைச்சா் பட்செட்சேக் பட்முன்க்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடன் கல்வி, பாதுகாப்பு, கலாசாரம், சுரங்கம், தூய்மையான எரிவாயு, வேளாண் பதப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடா்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம். மங்கோலியாவுடன் நல்லுறவைப் பேண இந்தியா தயாராகவுள்ளது’ என குறிப்பிட்டாா்.

மங்கோலியாவைத் தொடா்ந்து தென் கொரியாவுக்கு புதன்கிழமை செல்லும் ஜெய்சங்கா் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சோ ஹியுனை சந்திக்கிறாா். அதன்பிறகு வியாழக்கிழமை நடைபெறும் அமைதி மற்றும் வளமைக்கான ஜெஜு ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

சா்வதேச விவகாரங்கள் குறித்து பல்வேறு துறை நிபுணா்கள் கலந்துரையாடும் முக்கிய களமாக ஜெஜு ஆலோசனைக் கூட்டம் திகழ்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.