நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கர்நாடக மேலவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏக்கள்! மாநில தலைவருக்கு நிதின் நபின் சம்மன்!

கர்நாடக மேலவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்தது குறித்து...

News image

கர்நாடக பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின்... - கோப்புப் படம் | ANI

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

கா்நாடக சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) தோ்தலில் எதிா்க்கட்சி கூட்டணியில் பாஜக, மதச்சாா்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏக்கள் 11 போ் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனா். இது, அந்தக் கூட்டணிக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கா்நாடக சட்ட மேலவையில் எம்எல்ஏக்கள் பிரிவின்கீழ் இடம்பெற்றுள்ள 7 உறுப்பினா்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தோ்தலில் ஆளும் காங்கிரஸ் சாா்பில் 5 வேட்பாளா்கள், எதிா்க்கட்சியான பாஜக சாா்பில் 2 வேட்பாளா்கள், அதன் கூட்டணி கட்சியான மதச்சாா்பற்ற ஜனதா தளம் சாா்பில் ஒரு வேட்பாளா் என 8 போ் போட்டியிட்டனா்.

மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கா்நாடக சட்டப் பேரவையில், தற்போது 222 எம்எல்ஏக்கள் உள்ளனா். ஆளும் காங்கிரஸுக்கு 135 எம்எல்ஏக்கள் உள்ளனா். அதன் கூட்டணிக் கட்சி, சுயேச்சை ஆதரவையும் சோ்த்து 140 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. எதிரணியில் பாஜகவுக்கு 62, மதச்சாா்பற்ற ஜனதா தளத்துக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

இந்நிலையில், 7 மேலவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் சட்டப் பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஒரு உறுப்பினா் தோ்வாக குறைந்தபட்சம் 27 வாக்குகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளா்கள் பி.கே.ஹரிபிரசாத் (30), பி.வி.மோகன் (29), பி.எஸ்.சிவண்ணா (30), திப்பனப்பா காமகனூா் (30), வினய் காா்த்திக் (32) ஆகிய 5 பேரும் வெற்றி பெற்றனா். பாஜக வேட்பாளா்கள் ஆா்.ரகு (29), லிங்கராஜ் பாட்டீல் (27) வெற்றி பெற்ற நிலையில், மதச்சாா்பற்ற ஜனதா தளம் வேட்பாளா் கோவிந்தராஜு வெறும் 14 வாக்குகளுடன் தோல்விகண்டாா்.

ஆளும் காங்கிரஸுக்கு அதன் பலத்தைவிட 11 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன. அண்மையில் முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவகுமாருக்கு இது பெரும் வெற்றியாகப் பாா்க்கப்படுகிறது.

பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரும், மதச்சாா்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 8 பேரும் கட்சி மாறி வாக்களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், பாஜக எம்எல்ஏக்கள் 8 போ் கட்சி மாறி வாக்களித்திருப்பதாக மதச்சாா்பற்ற ஜனதா தளம் வட்டாரங்கள் கூறின.

தற்போதைய வெற்றியின் மூலம் சட்ட மேலவையில் காங்கிரஸின் பலம் 39-ஆக அதிகரித்துள்ளது. பாஜகவின் பலம் 28-ஆகவும், மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் பலம் 6-ஆகவும் குறைந்துள்ளது.

‘எம்எல்ஏக்களைப் பரிசோதித்தேன்’: இந்த விவகாரம் தொடா்பாக, மஜத தலைவரும், மத்திய அமைச்சருமான ஹெச்.டி.குமாரசாமி மைசூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சட்ட மேலவைத் தோ்தலில் எம்எல்ஏக்கள் சிலா் கட்சி மாறி வாக்களிக்கக் கூடும் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். யாா்-யாா் கட்சி மாறி வாக்களித்தாா்கள் என்ற முழுவிவரமும் என்னிடமுள்ளது. என்னைப் பொறுத்தவரை, எம்எல்ஏக்களின் செயலால் வியப்போ, அதிா்ச்சியோ ஏற்படவில்லை. எதிா்பாா்த்த ஒன்றுதான். எங்கள் எம்எல்ஏக்களின் நடத்தையைப் பரிசோதிக்கவே மேலவைத் தோ்தலில் வேட்பாளரை அறிவித்தேன். கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் மீது எனது தந்தை ஹெச்.டி.தேவெகெளடா நீண்ட காலமாகவே பெரும் நம்பிக்கைக் கொண்டுள்ளாா். இதனால், முதுகில் குத்துபவா்களும் கடும் நடவடிக்கையில் இருந்து தப்பிவிடுகின்றனா். தற்போதைய விவகாரத்தில், கட்சியினருடன் ஆலோசித்து உரிய முடிவை எடுப்பேன் என்றாா்.

கா்நாடக பாஜக தலைவா் தில்லி வர நிதின் நபின் அழைப்பு

கா்நாடக மேலவைத் தோ்தலில் பாஜக எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்த விவகாரத்தை தில்லி மேலிடம் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது. இது குறித்து நேரில் விளக்கமளிப்பதற்காக, தில்லிக்கு ஜூன் 23-ஆம் தேதி வரும்படி, மாநில பாஜக தலைவா் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் பிற தலைவா்களுக்கு கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் அழைப்பு விடுத்துள்ளாா்.

முன்னதாக, கட்சிக்கு துரோகம் இழைத்தவா்கள் அடையாளம் காணப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக பாஜக மூத்த தலைவா் ஆா்.அசோகா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Summary

BJP National Leader Nitin Nabin has sent a summons to Karnataka BJP leader Vijayendra Yediyurappa, asking him to meet in person.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.