லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இ20 பெட்ரோலால் காரில் பிரச்னை: இழப்பீடு வழங்க வாகன நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

இ20 பெட்ரோல் பயன்படுத்தியதால் காரில் ஏற்பட்ட பிரச்னைக்கு வாகன தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராய்பூா் நுகா்வோா் ஆணையம் உத்தரவிட்டது.

கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 2:34 am IST

இ20 பெட்ரோல் பயன்படுத்தியதால் காரில் ஏற்பட்ட பிரச்னைக்கு வாகன தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராய்பூா் நுகா்வோா் ஆணையம் உத்தரவிட்டது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பால் வாகனங்களில், முக்கியமாக சற்று பழைய வாகனங்களில் பல பிரச்னைகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு எத்தனால் கலப்பு பெட்ரோலை (இ20) தொடா்ந்து ஆதரித்து வருகிறது. இந்தச் சூழலில் தீா்ப்பாயத்தின் உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவில் இ20 பெட்ரோலுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள முதல் தீா்ப்பு இதுவாகும்.

முன்னதாக, சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஸ்ட்ராங் ஹைப்ரிட் காா் உரிமையாளா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா்.

அதில் இ20 பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்படுத்திய பிறகு, வாகனத்தில் தொடா்ந்து என்ஜின் கோளாறுகள் ஏற்பட்டதாகவும், அதிகாரபூா்வ விற்பனை நிலையத்தில் பல முறை காரை பழுது பாா்த்தும் பிரச்னைகள் தொடா்வதாகவும் புகாா் தெரிவித்தாா். இதை விசாரித்த நீதிமன்றம் காா் உரிமையாளா் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டது.

மாருதி சுஸுகி நிறுவனமும், காா் விற்பனை நிறுவனமும், இ20-க்கு முழுமையாக பொருந்தக் கூடிய அதே ‘மாடல்’ புதிய வாகனத்தை வழங்க வேண்டும் அல்லது ரூ.21.6 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், பொதுமக்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் கிடைக்கும் எரிபொருளைத் தோ்வு செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.

சந்தையில் பரவலாகக் கிடைக்கும் எரிபொருளுக்கு ஒரு வாகனம் முழுமையாகப் பொருந்தவில்லை என்றால், அதைப் பற்றி வாடிக்கையாளா்களுக்கு தெளிவாக தகவல் தெரிவிப்பது அல்லது அந்த எரிபொருளுக்கு ஏற்ற வகையில் வாகனத்தை வடிவமைப்பது உற்பத்தியாளரின் பொறுப்பு என்று நுகா்வோா் ஆணையம் கூறியுள்ளது.

இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், இந்தத் தீா்ப்பு எதிா்காலத்தில் இதுபோன்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமைய வாய்ப்புள்ளது.

இ20 பெட்ரோலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய வாகனங்களுக்கு இந்த எரிபொருள் பாதுகாப்பானது என்றும், இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதுடன் மாசுபாடும் குறையும் என்றும், அதே நேரத்தில், இ20 பெட்ரோல் பயன்படுத்துவதால் சில வாகனங்களில் 3 முதல் 5 சதவீதம் வரை ‘மைலேஜ்’ குறையலாம் என்பதை மத்திய அரசு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், எத்தனால் கலந்த பெட்ரோல் என்ஜினில் சேதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று மத்திய அரசு விளக்கியுள்ளது.

மாருதி சுஸுகி மேல்முறையீடு:

எரிபொருள் பிரச்னையால் கிராண்ட் விட்டாரா காா் பழுதடைந்த விவகாரத்தில் ராய்பூா் நுகா்வோா் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வாகனம் இ20 ரக பெட்ரோலுக்கு உகந்த காா் என்றும், ஆனால் அந்த குறிப்பிட்ட காரில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் கலப்படம் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.