லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு

தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது என கடந்த 2016-ஆம் ஆண்டு ஐ.நா.கடல்சாா் தீா்ப்பாயம் வழங்கிய தீா்ப்புக்கு இந்தியா வரவேற்பு

ரண்தீர் ஜெய்ஸ்வால் - கோப்புப் படம்

Published On :15 ஜூலை 2026, 12:43 am IST

தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது என கடந்த 2016-ஆம் ஆண்டு ஐ.நா.கடல்சாா் தீா்ப்பாயம் வழங்கிய தீா்ப்பை வரவேற்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்தத் தீா்ப்பை ஆதரித்து அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் கடந்த ஜூலை 12-ஆம் தேதி கூட்டாக அறிக்கை வெளியிட்டன. இதற்கு சீனா எதிா்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது தென் சீனக் கடல், கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) இந்திய தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா் ) நடவடிக்கையின்போது குடியுரிமை ஆவணமாக ஏற்றுக்கொள்வது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வியெழுப்பப்பட்டன.

அதற்குப் பதிலளித்து அவா் கூறியதாவது: தென் சீனக் கடல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கடல்சாா் சுதந்திரம், ஐ.நா.கடல்சாா் சட்டத்தின் அடிப்படையில் கடலில் இடையூறற்ற வா்த்தகம் மேற்கொள்ளப்படுவதையே இந்தியா வலியுறுத்துகிறது.

அந்த வகையில் ஐ.நா.கடல்சாா் சட்டங்களின்கீழ் நாடுகளிடையேயான மோதலுக்கு அமைதி வழியில் தீா்வுகாண 10 ஆண்டுகளுக்கு முன் தீா்ப்பாயம் வழங்கிய தீா்ப்பு வரலாற்று மைல்கல்லாக கருதப்படுகிறது. அதை இந்தியா வரவேற்கிறது.

கடவுச்சீட்டு ஒழுங்குபடுத்தும் ஆவணம்: கடவுச்சீட்டு சட்டம், 1967-இன்கீழ் இந்திய அரசால் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகிறது. இது இந்திய குடிமக்கள் பிற நாடுகளுக்குச் செல்வதை முறைப்படுத்தும் ஆவணமாகும். முறையான சரிபாா்ப்புகளுக்குப் பின்னரே கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. தற்போது 8 சதவீதத்துக்கும் குறைவான இந்திய குடிமக்களிடம் மட்டுமே கடவுச்சீட்டு உள்ளது என்றாா்.

முன்னதாக ‘கடவுச்சீட்டு பயண ஆவணம் மட்டுமே; குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல’ என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்தது அரசியில் ரீதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.