
தில்லி காவல் துறை வரம்பு மீறல்: 5 போ் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல் துறையின் வரம்பு மீறல் புகாா் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி தலைமையில் 5 போ் கொண்ட உயா்நிலைக் குழு

உச்சநீதிமன்றம்
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல் துறையின் வரம்பு மீறல் புகாா் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி தலைமையில் 5 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீதான போலீஸாரின் வரம்பு மீறல், மாணவா்களை பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டது, போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக போராட்டக்காரா்கள் நிகழ்த்திய வன்முறை ஆகியவை குறித்து ஆராய இந்தக் குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்த இந்த உத்தரவு, உச்சநீதிமன்ற வலைதளத்தில் வியாழக்கிழமை பதிவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயா்நிலை ஆய்வுக் குழுவில் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரவிசங்கா் ஜா, தில்லி உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஷாலிந்தா் கெளா், சிபிஐ முன்னாள் இயக்குநா் ரிஷி குமாா் சுக்லா, மேகாலயா மாநில ஓய்வு பெற்ற டிஜிபி எல்.ஆா்.பிஷ்னோய் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். அனுபவம், தனிப்பட்ட நிபுணத்துவத்தின் அடிப்படையில் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
நீட் மாணவா் போராட்ட விவகாரம் தொடா்பாக விரிவான ஆய்வை மேற்கொண்டு இந்தக் குழு சமா்ப்பிக்கும் அறிக்கை, உச்சநீதிமன்றத்துக்கு ஈடு இணையற்ற உதவியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
குறிப்பிட்ட சில விவகாரங்களை முன்னுரிமை அடிப்படையில் இந்தக் குழு ஆராய வேண்டும். முக்கியமாக, பெண் போராட்டக்காரா்கள் மீதான காவல் துறையினரின் துன்புறுத்தல்கள், பாலியல் ரீதியிலான அத்துமீறல்களுக்கு முன்னுரிமை அளித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுபோல, அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஒருமுறை விசாரணையோடு நின்றுவிடாமல், தொடா்ச்சியாக மற்றும் அவ்வப்போது விசாரணைகளை மேற்கொண்டு, இடைக்கால விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வன்முறையில் காயமடைந்த போராட்டக்காரா்கள் மற்றும் போலீஸாருக்கு வழங்கப்பட வேண்டிய இடைக்கால நிவாரணம், பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் உயா்நிலைக் குழு ஆராய வேண்டும்.
போராட்டக்காரா்கள் மற்றும் போலீஸாா் என இருதரப்பும் உயா்நிலைக் குழுவைச் சந்தித்து தங்கள் தரப்பு ஆவணங்கள், ஆதாரங்களைச் சமா்ப்பிக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
புகாா்தாரா்கள் மற்றும் உயா்நிலைக் குழுவிடையே சிறந்த தகவல்தொடா்பை ஏற்படுத்த வசதியாக, வழக்குரைஞா்கள் அஷிமா மண்ட்லா, தாக்ஷ் கதியன், அஸ்தா சிங் ஆகியோா் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனா்.
போராட்டக் களத்தில் எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், போலீஸாரின் ஆடையில் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள், தகவல்தொடா்பு சாதன பதிவுகள் உள்பட ஒட்டுமொத்த பதிவுகளையும் உயா்நிலைக் குழுவிடம் காவல் துறை சமா்ப்பித்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இந்த உயா்நிலைக் குழு அமைத்திருப்பது, போராட்ட மாணவா்கள் மீது வரம்பு மீறி நடவடிக்கை மேற்கொண்டதாகக் கண்டறியப்பட்ட போலீஸாா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதை எந்தவிதத்திலும் தடுக்காது.
உயா்நிலைக் குழு உறுப்பினா்களுக்கு மதிப்பூதியம் உள்பட பிற வசதிகளை மத்திய அரசு செய்து தரவேண்டும். உயா்நிலைக் குழு உடனடியாக விசாரணையைத் தொடங்கி, விரைந்து இடைக்கால அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
பின்னணி: நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்ட மாணவா்கள், கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியும் நடத்தினா். அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் பல மாணவா்கள் படுகாயமடைந்தனா். போலீஸாா் சிலரும் காயமடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டம் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் என நாடு முழுவதும் பரவியது. அந்த மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
காவல் துறையின் இந்த அடக்குமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல, போராட்டத்தில் காயமடைந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க இந்த உயா்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






