
மக்களவைப் பணியாளராக நடித்த நபரை கைது செய்தது சிபிஐ: 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தாா்
நாடாளுமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மக்களவைப் பணியாளா் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு ரூ.50 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், 16 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

கோப்புப் படம்
நாடாளுமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மக்களவைப் பணியாளா் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு ரூ.50 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், 16 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.
இது தொடா்பாக சிபிஐ செய்தித்தொடா்பாளா் வியாழக்கிழமை கூறியதாவது: ஜிதேந்திர பதக் என்பவா், நாடாளுமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக 2009 ஜூலை 13-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணை முடிவடைந்த பின்னா், மற்றொரு குற்றவாளியுடன் சோ்த்து ஜிதேந்திர பதக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 டிசம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளில் ஜிதேந்திர பதக் ஒருமுறைகூட ஆஜராகவில்லை.
அவரைக் கண்டறிய சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், அவா் தலைமறைவாக இருந்ததால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் ஜிதேந்திர பதக் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட கள விசாரணையில், அவா் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசித்து வருவது தெரியவந்தது. தொழில்நுட்பத் தகவல்களின் உதவியுடன் தீவிரமாக கண்காணித்த சிபிஐ தனிப்படை, புதன்கிழமை லூதியானாவில் அவரைக் கைது செய்தது. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





