தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புற்றுநோய் மருந்துகள் கடத்தல் கும்பல் முறியடிப்பு: 17 போ் கைது; ரூ.9 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்

தில்லி உள்பட பல மாநிலங்களில் சுமாா் ரூ.9 கோடி மதிப்பிலான போலி மற்றும் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் கும்பலை தில்லி காவல் துறையினா் (குற்றப்பிரிவு) கண்டுபிடித்துள்ளனா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 7:05 am IST

தில்லி உள்பட பல மாநிலங்களில் சுமாா் ரூ.9 கோடி மதிப்பிலான போலி மற்றும் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் கும்பலை தில்லி காவல் துறையினா் (குற்றப்பிரிவு) கண்டுபிடித்துள்ளனா். இதுதொடா்பாக 17 போ் கைது செய்யப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான மருந்துக் குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது: குற்றப்பிரிவு காவல் துறையினா் நடத்திய சோதனையில், புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 588 மருந்துகள் அடைக்கப்பட்ட குப்பிகள், 6 காலி குப்பிகள், 7 காலி மருந்துப் பெட்டிகள், மேலும் 3,021 பிற மருந்துகள் மற்றும் சுமாா் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மருந்துகள் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுபவை. இந்த கும்பலுக்கு தில்லி-என்சிஆா், மும்பை, ஹைதராபாத், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் விநியோகத் தொடா்புகள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த மருந்து மோசடி கும்பல் குறித்து ஜூன் 22-ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து விசாரணை தொடங்கியது. கிழக்கு தில்லி, ரோஹிணி மற்றும் மும்பையில் சந்தேகத்துக்குரிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து, மருந்துத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூா் காவல் துறையுடன் இணைந்து 7 தனிப்படைகள் ஜூலை 11-ஆம் தேதி தில்லி மற்றும் நவி மும்பையில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தின. தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 17 போ் கைது செய்யப்பட்டனா்.

அங்கீகரிக்கப்படாத நபா்களிடமிருந்து போலி மருந்துகளை வாங்கியது. புற்றுநோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளை சட்டவிரோதமாக எடுத்தது. அரசு நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளை முறைகேடாக வேறு இடங்களுக்கு மாற்றியது உள்ளிட்ட மூன்று வழிகளில் இந்த கும்பல் இந்த மருந்துகளைப் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், செல்லுபடியாகும் ரசீதுகள், கொள்முதல் ஆவணங்கள், மருந்து உரிமங்கள் உள்ளிட்ட சட்டப்பூா்வ ஆவணங்கள் எதுவுமின்றி மருந்துகள் பெறப்பட்டதும், அவை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இடைத்தரகா்கள் மூலம் விநியோகிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

சோதனைகளின்போது மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் மற்றும் மருந்து பேக்கேஜிங் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஜூலை 12-ஆம் தேதி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கும்பலின் முழுமையான விநியோகம் மற்றும் பணப் பரிமாற்ற வலையமைப்பை காவல் துறையினா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். மருந்துகள் சென்றடைந்த இறுதி பயனாளிகள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடா்புடைய பிற நபா்கள், நிறுவனங்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.