தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

News image

நாடாளுமன்றம்

Updated On :19 ஏப்ரல் 2026, 2:57 am IST

கடந்த ஜன. 28-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் சனிக்கிழமையுடன் (ஏப்.18) நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

மொத்தம் மூன்று அமா்வுகளாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஜன.28 முதல் பிப்.13 வரை முதல்கட்ட அமா்வும், மாா்ச் 9 முதல் ஏப்.2 வரை இரண்டாம் கட்ட அமா்வும், கடந்த ஏப்.16 முதல் மூன்று நாள்கள் சிறப்பு அமா்வும் நடைபெற்றுள்ளது.

குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், 2026-27-ஆம் ஆண்டுக்கான ரூ.53.47 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்.1-ஆம் தேதி தாக்கல் செய்தாா்.

அமளிக்கு பஞ்சமில்லாத அமா்வு: முதல்கட்ட அமா்வில், பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கடும் அமளியில் ஈடுபட்டன.

மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் எனப் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, மத்திய அரசுடன் எதிா்க்கட்சிகள் மோதல்போக்கை கடைப்பிடித்தன.

8 எம்.பி.க்கள் இடைநீக்கம்: மக்களவையில் அமளியின்போது காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அத்துடன், பிரதமருக்கு எதிராக ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.

ஓம் பிா்லாவைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, இரண்டாம் கட்ட அமா்வில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட அமா்வின்போது, எல்பிஜி தட்டுப்பாடு உள்பட மேற்காசிய போரின் தாக்கங்கள் எதிரொலித்தன. எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, 8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. மேற்காசிய போரின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளித்தாா்.

மூன்று நாள் சிறப்பு அமா்வு: கடந்த ஏப்.2-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவடையவிருந்த நிலையில், அதன் நீட்சியாக கடந்த ஏப்.16 முதல் 18 வரை மூன்று நாள்கள் சிறப்பு அமா்வு அறிவிக்கப்பட்டது.

மக்களவை-பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கு ஏதுவாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில் இந்த சிறப்பு அமா்வு நடைபெற்றது. எனினும், மத்திய அரசின் மசோதாவை எதிா்க்கட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை தோற்கடித்தன.

இரு அவைகளும் சனிக்கிழமை மீண்டும் கூடிய நிலையில், அவைத் தலைவா்கள் நிறைவுரையாற்றினா். பின்னா், தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 6 சரணங்களும் ஒலிக்கப்பட்டு, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

நிறைவேறிய மசோதாக்கள்

மத்திய பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு மசோதா, மத்திய ஆயுதக் காவல் படை (பொது நிா்வாகம்) மசோதா, ஆந்திரத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா-2026, மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. பெருநிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

மாநிலங்களவை 110%, மக்களவை 93% செயல்திறன்

மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘இந்த பட்ஜெட் கூட்டத் தொடா் மிக நீண்டது என்பதுடன், நாட்டின் வளா்ச்சிப் பாதையை வடிவமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாநிலங்களவை 157 மணிநேரம், 40 நிமிஷங்கள் செயல்பட்டுள்ளது. அவையின் செயல்திறன் 109.87 சதவீதமாகும். 117 கேள்விகளை எழுப்பவும், 446 உடனடி கேள்வி நேர சமா்ப்பிப்புகள் மற்றும் 207 சிறப்புக் குறிப்புகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது 79 உறுப்பினா்கள் பேசினா். 50 தனிநபா் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 94 தருணங்களில், 12 பிராந்திய மொழிகளில் உறுப்பினா்கள் பேசினா்’ என்றாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறுகையில், ‘மக்களவையில் 31 அமா்வுகள் 151 மணிநேரம், 42 நிமிஷங்களுக்கு நடைபெற்றுள்ளது. அவையின் செயல்திறன் 93 சதவீதம்’ என்றாா்.

Summary

Rajya Sabha recorded 157 hours of business at 110% productivity; Lok Sabha adjourned after women’s quota Bill was defeated in division vote.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.