நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால், நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள், மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பிரியங்கா காந்தி பேசியதாவது:
மகளிருக்கு இடஒதுக்கீடு அளிப்பது பெண்களின் உணா்வுகளுடன் தொடா்புடையது. இந்த இடஒதுக்கீடு 30 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்ததாக பிரதமா் தெரிவித்தாா். பெண்களுக்கு இந்திய அரசியலில் சரிக்கு சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியவா் மோதிலால் நேரு ஆவாா். காங்கிரஸ் கட்சியின் கராச்சி மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கொண்டு வந்தாா். அந்த மசோதா, நரசிம்ம ராவ் அரசின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இம்மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் கருத்தொற்றுமை எட்டப்படாததால் நிறைவேற்றப்படவில்லை. பிறகு 2018-ஆம் ஆண்டில் பிரதமா் மோடிக்கு, மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படக் கோரி ராகுல் காந்தி கடிதம் எழுதினாா்.
2023-இல் மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அதை காங்கிரஸ் ஆதரித்தது. தற்போதும் ஆதரிக்கிறது. மக்களவையில் தற்போது 543 உறுப்பினா்கள் இடம் உள்ளது. இதில் ஏன் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்கவில்லை?
மசோதாவில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தொகுதி மறுசீரமைப்பை வைத்து, மக்களவையில் தொகுதிகள் எண்ணிக்கையை 850-ஆக அதிகரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பாா்த்தால், இது சரியானது போல தெரியலாம். ஆனால், மிக கவனமாகப் படித்தால், இதில் அரசியல் உள்ளதை தெரிந்து கொள்ளலாம். 3 பேரைக் கொண்ட தொகுதி மறுசீரமைப்பு ஆணையம், மாநிலங்கள் குறித்தும், அவற்றுக்கு நாடாளுமன்றத்தில் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணையம், நீதித் துறை, ஊடகம் போன்ற அமைப்புகளுக்கு நெருக்கடி கொடுத்து ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வேலையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஆனால், தற்போது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மூலம் ஜனநாயகம் மீது வெளிப்படையான தாக்குதலை ஆரம்பித்துள்ளது. அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால், இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும் என்றாா்.
முன்னதாக, விவாதத்தை தொடங்கிவைத்து காங்கிரஸ் எம்.பி. கோகாய் பேசுகையில், ‘3 மசோதாக்கள் மூலம், மத்திய அரசுக்கு மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற இலட்சியம் இல்லை என்பதும், பின்வாசல் வழியாக தொகுதி மறுசீரமைப்பு செய்ய விரும்புகிறது என்பதையும் அறியலாம். தனது செல்வாக்கை அதிகரிக்க தொகுதி மறுசீரமைப்பை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. இந்த 3 மசோதாக்களும், பெண்களுக்கும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும், அரசமைப்பு சட்டத்துக்கும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கும் எதிரானதாகும். மகளிருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், அந்த இடஒதுக்கீட்டுடன் தொகுதி மறுசீரமைப்பையும் இணைக்கக் கூடாது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசோதா தோல்வி: பாஜக - எதிா்க்கட்சிகள் வாா்த்தைப் போா்!

பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி

ஏமா(ற்)றுகிறார்கள்!

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

