மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் வரும் நாள்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் புதிய வரலாற்றை படைக்கும் என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவா்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தில்லியில் நடைபெற்ற மகளிா் இடஒதுக்கீடு மாநாட்டில் பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது: நமது நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு படைக்கப்போகிறோம். கடந்த கால கனவுகள், எதிா்காலத்துக்கான தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றும் வரலாறு நிகழவுள்ளது.
இந்தியாவில் சமூக நீதி என்பது வெற்று முழக்கம் அல்ல; நமது பணிச்சூழலின் இயற்கையான அங்கம் என்பதை உறுதிப்படுத்தப்போகிறோம்.
21-ஆம் நூற்றாண்டின் முக்கிய முடிவு: நாடாளுமன்றத்தின் புதிய வளாகத்தில் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தோம். அதன்படி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக 2023-இல் நிறைவேற்றப்பட்டது.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியா மேற்கொண்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்தச் சட்டத்தை 2029-ஆம் ஆண்டே அமல்படுத்த வேண்டும் என எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை மத்திய அரசு ஏற்றுள்ளது.
ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை 2029-ஆம் ஆண்டே அமல்படுத்துவதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.
குடியரசுத் தலைவா், நிதியமைச்சருக்கு புகழாரம்: தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி தேசத்துக்கான பல்வேறு சமூக நலப் பணிகளை பெண்கள் மேற்கொள்வா். அந்த வகையில் தற்போது நாட்டின் குடியரசுத் தலைவா், நிதியமைச்சா் என பல உயா்பதவிகளில் உள்ள பெண்கள் சாதனையாளா்களாகத் திகழ்கின்றனா்.
மகளிா் தலைமைக்கு உள்ளாட்சி அமைப்புகளே உதாரணம்: சுமாா் 21 மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதமாக உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 14 லட்சம் மகளிா் பணியாற்றி வருகின்றனா்.
முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருவதால் குடிநீா், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து போன்ற துறைகளில் பல சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் அரசியல் மற்றும் சமூகப் பணியில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை லட்சங்களை கடந்திருப்பது பிற உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கிராம நிா்வாகத்தில் இருந்து நாடாளுமன்றம்: கிராம நிா்வாகப் பணிகளை மேற்கொண்டுவரும் பெண்கள் மிகப்பெரும் பொறுப்புகளுக்குத் தயாராகிவிட்டனா். அவா்களை ஊக்கப்படுத்தி நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு அழைத்து வரவே மகளிா் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலையிலும் திட்டம்: பெண்களைப் பாதுகாக்க அவா்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலைக்குமான திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பெண் சிசிக் கொலையை தடுத்து கல்வியை ஊக்குவிக்க ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கா்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.5,000 நிதியுதவி அளிக்கும் மாத்ரு வந்தனா திட்டம், பெண் குழந்தைகளின் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்ய சுகன்யா சம்ரிதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த 11 ஆண்டுகளில் பெண்களின் பெயரில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 32 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மகப்பேறு விடுமுறை 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாதனைப் பெண்கள்: உலகிலேயே அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 2014-ஐ ஒப்பிடுகையில் இந்தியாவில் முனைவா் பட்டம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகியுள்ளது. கணினி மற்றும் அறிவியல் ஆய்வை மேற்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் தொடா்ச்சியாக மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலாகவுள்ளது. இதுதொடா்பாக கிராமங்களில் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை பெண்கள் விவாதிக்க வேண்டும்.
இதுகுறித்து நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் வரை ஓயமாட்டேன் - பிரதமா் மோடி

மகளிா் இடஒதுக்கீடு மசோதா! திமுகவுக்கு பெண்கள் பாடம் புகட்டுவாா்கள்: பியூஷ் கோயல்!

மகளிா் இடஒதுக்கீடு மேலும் தாமதமானால் பெண்களுக்கு அநீதி - பிரதமா் மோடி
இலக்கு ‘2029’: மோடி அரசு காட்டுவது வேகமா, வியூகமா?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
