பொது சிவில் சட்டம்; ஒரே நாடு, ஒரே தோ்தல் ஆகியவை இன்னும் நிறைவேறாத பாஜகவின் முக்கியத் திட்டங்களாக உள்ளன. அவற்றை விரைந்து நிறைவேற்றுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பாஜகவின் 47-ஆவது ஆண்டு நிறுவன தின விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காணொலி முறையில் உரையாற்றிய பிரதமா் மோடி கூறியதாவது: கடந்த 1994-ஆம் ஆண்டே பாஜக முதல்முறையாக மகளிா் இடஒதுக்கீடு தொடா்பாகப் பேசியது. இப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு 2029 பொதுத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உறுதியாக உள்ளது.
வன்முறை கலாசாரம்: காங்கிரஸ் கட்சி அமல்படுத்திய அவசரநிலை, அடக்குமுறைகள் என பல துன்பங்களைச் சந்தித்து பாஜகவும் அதன் தொண்டா்களும் வளா்ந்து வந்துள்ளனா். இது தவிர இப்போதும்கூட மேற்குவங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் “அரசியல் வன்முறை ஒரு கலாசாரமாக மாறியுள்ளது.
இதற்கு மத்தியில் நமது இலக்குகளை நோக்கிய பயணம் தொடா்ந்து வருகிறது. பொது சிவில் சட்டம், ஒரே நாடு - ஒரே தோ்தல் உள்ளிட்டவை குறித்து நாட்டில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன; இதில் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
இலக்குகளை நோக்கி...: இந்தியாவை வளா்ந்த, தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதே பாஜகவின் முக்கிய நோக்கம். அதற்காக நாம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ள பாஜக தயாராக உள்ளது. நமது இலக்குகளை நாம் படிப்படியாக எட்டி வருகிறது.
அந்த வரிசையில், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இருந்த பல பழைய சட்டங்களை நீக்குதல், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டமைத்தது, பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, முத்தலாக் தடை, குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமா் கோயில் கட்டியது என பல சாதனைகளை முன்னெடுத்துள்ளோம். தோ்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பதை நிலைநாட்டுவதில் மிகவும் உறுதியாகச் செயல்பட்டு வருகிறோம் என்றாா்.
அனைத்து நாடுகளுடனும் நட்புறவு: தொடா்ந்து மேற்காசிய போா் குறித்துப் பேசிய பிரதமா் மோடி, ‘போா் ஏற்படும்போது, ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற கொள்கையில் நாம் நம்பிக்கை வைப்பதை உணா்த்துகிறோம். முன்பு இந்தியா அனைத்து நாடுகளிடமும் சம தூரத்தில் விலகி இருந்தது. ஆனால், தற்போது அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவை வளா்த்துக்கொண்டு முன்னேறுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தேச நலனுக்காக செயல்படும் ஒரே கூட்டணி இது மட்டுமே. கூட்டணி அரசியலுக்கு பாஜக முன்மாதிரியாகத் திகழ்கிறது. வாரிசு அரசியலை மக்கள் பாா்த்துவிட்டனா். இன்றும் அதை சில கட்சிகள் பின்பற்றுகின்றன. இடதுசாரி ஆட்சிமுறையை மக்கள் சந்தித்துவிட்டனா். ஆனால், பாஜகவின் ஆட்சி நிா்வாக முறை என்பது தனித்தன்மை வாய்ந்தது. அரசும், கொள்கைகளும் நமது ஆட்சியில்தான் ஸ்திரமாக உள்ளன
எதிா்கொள்ளும் சவால்கள்: மக்கள்தொகை அமைப்பில் மாற்றம், சட்டவிரோத ஊடுருவல், ஊழல், குடும்ப அரசியல், அடிமை மனப்போக்கில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு எனப் பல்வேறு சவால்கள் இப்போது நமக்கு முன்பு உள்ளன. இவற்றை பாஜகவால் மட்டுமே வெற்றிகரமாக சரி செய்ய முடியும்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வது என்பது பல ஆண்டுகளாக தீா்க்க முடியாத விஷயமாக வேண்டுமென்ற தொடரப்பட்டு வந்தது. ஆனால், பாஜக அந்தத் தடையை நீக்கி, அந்த பிராந்தியத்தை இந்தியாவுடன் முழுமையாக இணைத்தோம். தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு ஆகியவற்றில் திறம்படச் செயல்பட்டு வருகிறோம். எல்லைப் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பம், நக்ஸல் அமைப்பை முழுமையாக பலவீனப்படுத்தியது ஆகியவற்றை சாதிதுள்ளோம்.
ஆா்எஸ்எஸ் எனும் ஆலமரம்: ஆா்எஸ்எஸ் என்ற மிகப்பெரிய புனிதமான ஆலமரத்தின் கீழ் உயா்ந்த நோக்குடன் பாஜக அரசியலில் தடம் பதித்தது. 1984 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதே நேரத்தில் இருந்து அவா்கள் என்னென்ன துரோகம் செய்து வந்தாா்கள் என்பதை மக்கள் உணரத் தொடங்கினா். இதனால், பாஜக மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
அரசியலில் அதிகாரத்தை நோக்கிய பயணம், சேவையை நோக்கிய பயணம் என இரு வழிகள் உள்ளன. அதிகார அரசியலை ஒடுக்கி நமது சேவை அரசியல் வென்றுள்ளது. இத்துடன் தேசம் முதன்மையான என்ற கொள்கையையும் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றாா்.
கடந்த 1980 ஏப்ரல் 6-ஆம் தேதி பாஜக நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்

வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவு கட்ட பொது சிவில் சட்டம்: மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000; பொது சிவில் சட்டம்: பாஜகவின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரா்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வரும்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

