பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

புற்றுநோய் எண்மப் பதிவேடு தேவை!

புற்றுநோயை "அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' தேசிய அளவில் அறிவிக்கை செய்து ஒருங்கிணைந்த புற்றுநோய் எண்மப் பதிவேட்டை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோப்புப் படம் - படம்: DIPR

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:49 am IST

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிந்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், அதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்யுமாறு 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாலும், புற்றுநோய் தொற்றா நோயாக இருப்பதாலும் அத்தகைய அறிவிக்கையை வெளியிடுவதில் இத்தனை ஆண்டு காலம் தாமதம் ஏற்பட்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் மூலம் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

ஒரு நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்ய வேண்டுமானால், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நோய்ப் பரவலைத் தடுக்க தொடர்பாளர்களைக் கண்டறிதல், அவர்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த் தடுப்புக்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிவிக்கை செய்வதன்மூலம் பொதுமக்களிடம்

புற்றுநோயின் தாக்கம், பொது சுகாதாரத் திட்டங்களில் அந்நோய்க்கான சிகிச்சை, தடுப்புக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திட்டச் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளத் தேவையான புள்ளிவிவரங்கள் எளிதில் கிடைக்கும்.

இந்தியாவில் புற்றுநோயை "கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டிய நோய்' என்ற நடைமுறை இல்லாததால், நோய் பாதிப்பு தொடர்பான உரிய தரவுகள் இல்லை. ஆதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான போதிய கண்காணிப்பும் இல்லாத நிலையே இதுவரையில் உள்ளது. தரவுகள் இல்லாததால் நோய்க்கான சிகிச்சை அளிக்கவும், நோயைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கொள்கைகளை அரசு வகுக்கவும் முடியாத நிலை இருந்து வருகிறது.

உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் சுமார் 98 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் 2050-இல் ஆண்டுதோறும் சுமார் 3.50 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவின்

புற்றுநோய் சங்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். நாட்டில் ஆண்டுதோறும் சுமார்

16 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் சுமார் 8.70 லட்சம் பேர் இறக்கின்றனர். மற்ற மாநிலங்களைவிட வட கிழக்கு மாநிலங்களான மிúஸôரம், மேகாலயம், அஸ்ஸôமில் பாதிப்பு அதிகம். புகையிலை, மதுப் பழக்கம், நகரமயமாதல் போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உணவு உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களே முக்கியமான காரணிகள் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அறிவிக்கை முறை இல்லாததால் முறையாகக் கண்காணிக்க முடிவதில்லை. மேலும், தாமதமான நோயறிதல், அதிக சிகிச்சை செலவுகளால் பாதிப்புகள் அதிகரித்து நிலைமை மோசமடைந்து வருகிறது. பல மாநிலங்களில் நோயாளிகளுக்கு பாதிப்பு

முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால், சிகிச்சையும் கடினமானதாகவும், செலவுமிக்கதாகவும் ஆகிவிடுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. நிலைமை மோசமடைந்து வருவதைக் கண்ட பிரபல மருத்துவர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருகிறது. புற்றுநோய் பெருந்தொற்றைக் கையாள்வதில் கொள்கை முடக்கம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோயை கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்யாமல் இருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-ஆவது பிரிவுகளின் கீழ், அரசு தனது அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து தீவிரமாக விலகுவதற்குச் சமமாகும்'' என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு கடந்த 2018-ஆம் ஆண்டே அறிவிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அதை விசாரித்த உச்சநீதிமன்றம், எஞ்சிய 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பரிசீலித்து விரைவில் உரிய முடிவை எடுக்க வேண்டும். அது தொடர்பான பதில் மனுவையும் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ், சுகாதாரம் முதன்மையாக மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளபோதும், நோய்களை அறிவிக்கும் அதிகாரம் மத்திய, மாநில அரசுகளுக்கு இணையாக உள்ளது. எனவே, புற்றுநோயை "அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' தேசிய அளவில் அறிவிக்கை செய்து ஒருங்கிணைந்த புற்றுநோய் எண்மப் பதிவேட்டை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.