லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பசித்துப் புசித்தால் உணவே மருந்து!

சுவைக்கு அடிமையாவதைத் தவிர்த்து, ருசிக்காக தேடிச் செல்லாமல், பசிக்கு மட்டும் உண்டு வந்தால் என்றும் நலமுடன் இருக்கலாம்.

உணவே மருந்து..

Published On :9 பிப்ரவரி 2026, 4:11 am IST

உணவே மருந்து, இல்லாவிட்டால் மருந்தே உணவாகி விடும் என்பர் முன்னோர். நாடு பசிப் பிணி இல்லாமல் இருக்க வேண்டும் என கூறிய அவர்கள், அந்தப் பசியைப் போக்கும் உணவால் வேறு பிணிகள் வந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருந்தனர்.

ஆனால், அண்மைக்காலமாக நாம் உண்ணும் உணவே நமக்கு விஷமாகி வருகிறது. வீட்டில் சமைக்கும் உணவைச் சாப்பிட்டு வந்தால் தப்பித்தோம். வணிக ரீதியாக உணவகங்களில் தயாராகும் உணவுகள் உடலோடு மட்டுமல்ல, உயிரோடும் விளையாடி விடுகின்றன.

நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு மட்டுமல்ல, நாம் வாழும் பகுதிக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே நாம் உண்ண வேண்டும். அவ்வாறு இல்லாமல், நாவில் உமிழ்நீரைச் சுரக்க வைப்பதாகவும், பார்வைக்கு கவர்ச்சியாகவும் தெரியும் வெளிநாடுகளில் உண்பதாகக் கூறி, அதேபோல, இங்கு தயார்செய்யப்படும் உணவுகளை உண்பதில் சிறுவர் முதல் பெரியோர் வரை தற்போது ஆர்வம் காட்டுகின்றனர்.

பலரும் சைவ உணவுகளை மறந்து, அசைவ உணவுக்கு அடிமையாகி விட்டனர் என்றே கூறலாம். அசைவ உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதாகக் கூறப்பட்டாலும், அதை உரிய பக்குவத்தோடு தயார் செய்து உண்டால் எந்தவித பாதிப்புமில்லை.

ஆனால், இன்றைய சூழலில் பல உணவகங்களில் விற்பனையை அதிகரிப்பதற்காக, உணவுகளில் சேர்க்கப்படும் அளவுக்கு மீறிய ரசாயனம், சுவையைக் கூட்ட தேவையற்ற பொருள்கள் கலப்பு, வாய் மற்றும் வயிற்றைப் புண்ணாக்கும் வகையிலான காரம், அதிக உப்பு, புளிப்பு சேர்ப்பு போன்றவை அவற்றை உண்ணும்போது நாக்குக்கு ருசியாகத் தெரிந்தாலும், அன்றோ அல்லது மறுநாளோ ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தி, மருத்துவமனையில் நம்மை அனுமதிக்கச் செய்துவிடுகிறது.

வீதிக்கு வீதி தேநீர் கடைகள் இருப்பதுபோல, இப்போது தெருவுக்குத் தெரு பிரியாணி கடைகள் முளைத்த வண்ணம் உள்ளன. தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிரியாணி கடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ’மா' பிரியாணி, மீன் பிரியாணியை தவிர்த்து, பிற உயிரினங்கள் சார்ந்த பிரியாணி வகைகளும் 100 ரூபாயில் தொடங்கி, 500 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமியர்களின் பண்டிகை நாள்களிலும், அவர்களுடைய இல்ல திருமணம், புதுமனை புகுவிழா போன்றவற்றிலும் அனைத்துத் தருப்பினரும் பங்கேற்று பிரியாணியை விரும்பிச் சாப்பிடுவர். அதே போல, பிரியாணிக்கு பெயர் பெற்ற நகரங்களான ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல், சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்குச் சென்றால் ஆசைக்காக உண்டு மகிழ்வோரும் உண்டு.

ஆனால், காலமாற்றத்தில் இப்போது, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலமானாலும், பிறந்த நாள், திருமண நாள், காதணி விழா, நெடுநாள்களுக்குப் பிறகு சந்திப்பு என எந்தவித கொண்டாட்டமாக இருந்தாலும், அங்கு தவறாமல் இடம்பெறுவது பிரியாணியாகவே இருக்கிறது. தரமான உணவகங்களில் அவற்றைச் சாப்பிடுவோர் தப்பித்துக்கொள்கின்றனர்.

நாள்பட்ட இறைச்சிகளை உணவுக்குப் பயன்படுத்துவது, குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் பாதுகாப்பின்றி வைத்திருப்பது, உயிரோடு வாங்கிவந்து இறைச்சியாகப் பயன்படுத்தாமல், இறந்தவற்றை குறைவான விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் போக்கு சில பிரியாணி கடைகளில் அரங்கேறுகின்றன. இது ஒருபுறம் என்றால், நகரப் பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் குறைவான விலையில் ’கறி விருந்து' என்ற பெயரில் உணவகங்கள் பல உள்ளன.

இறைச்சியை வாங்கிச் சென்று, அதைச் சுத்தப்படுத்தி சமைத்துச் சாப்பிடுவதற்கு சோம்பல்பட்டு, இவ்வாறான உணவகங்களை நாடிச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வாறான உணவகங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் ஆய்வுக்குச் செல்லும்போது இத்தகைய குறைபாடுகளைக் கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனரே தவிர, தொடர்ந்து அந்த உணவகங்களைக் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஓரிரு நாள்கள் அதிகாரிகள் உத்தரவைச் செயல்படுத்தும் உணவகத்தினரும், அதன் பிறகு தங்களுடைய வருவாயைப் பெருக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். உணவகங்கள் மட்டுமல்ல, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் உள்ள விடுதிகளிலும் இவ்வாறான பிரச்னைகள் உள்ளன. பொதுமக்கள், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், அலட்சியம் காட்டுவதிலேயே பலரும் உள்ளனர். கலப்படமற்ற உணவுகளை உண்டோர் 85, 90 வயதுவரை வாழ்ந்தனர். அதற்கும் மேலாக 100 வயதைக் கடந்து வாழ்வோரும் உண்டு.

ஆனால், தற்போதைய அவசர காலத்தில் ஆரோக்கியமற்ற துரித உணவுகளால் 45 வயதுக்குள்ளாகவே உடல்நலன் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகம். உண்பது செரிப்பதற்கு ஏற்ப உழைப்பது சுருங்கிப் போனது, உடல் ஆரோக்கியம் கெடுவதற்கும் உயிரிழப்புக்கும் காரணம்.

அசைவ உணவு உண்டதால் மாணவர்களுக்கு பாதிப்பு, பொதுமக்களுக்கு பாதிப்பு என்று நாள்தோறும் வெளியாகும் செய்திகள், உணவின் மீதும், உணவகங்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது என்பதே உண்மை. வாழும் காலத்தில் மருத்துவமனையை நாடிச் செல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குரிய வழியைத் தேடினால், எந்த வகையிலும் தொல்லை இல்லை. அதற்கு சுவைக்கு அடிமையாவதைத் தவிர்த்து, ருசிக்காக தேடிச் செல்லாமல், பசிக்கு மட்டும் உண்டு வந்தால் என்றும் நலமுடன் இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.