தமிழன் திரைப்படத்தில் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தற்போதைய முதல்வர் விஜய்.
2002 ஆம் ஆண்டு வெளியான படம் தமிழன். இந்தப் படத்தில் கதாநாயகனாக விஜய்யும் கதாநாயகியாக பிரியங்கா சோப்ராவும் நடித்திருந்தனர். பிரியங்கா சோப்ராவுக்கு இதுதான் முதலும் கடைசியுமான தமிழ்ப் படம். அதன் பிறகு, அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.
விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் திரைக்கதையை எழுத, அறிமுக இயக்குநர் மஜித் இப்படத்தை இயக்கியிருந்தார். நாசர், ரேவதி, விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தின் இசையமைப்பாளரான டி. இமானுக்கும் இது முதல் படமே. இருப்பினும், இப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களில் கவிஞர் வாலி ஒன்றையும் மீதமுள்ள நான்கு பாடல்களை வைரமுத்துவும் எழுதினர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
படத்தின் கதையைப் பார்க்கும்போது, பொறுப்பற்ற இளைஞரான சூர்யா (விஜய்) தனது நண்பர்களோடு சுற்றித் திரிகிறார். அவர் அடிக்கடி சிறு சிறு சண்டைகளில் ஈடுபடுவதும் உண்டு. இந்த சூழலில் பிரியாவைப் (பிரியங்கா சோப்ரா) பார்த்த சூர்யா அவர் மீது காதல் கொள்கிறார். இவ்வாறு சுற்றித் திரியும் சூர்யாவை அவரது மாமாவான சக்திவேல் (நாசர்) தன்னுடைய மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணிபுரியுமாறு சொல்கிறார். இதைத் தொடர்ந்து, சக்திவேல் வாதிட்ட ஒரு முக்கிய வழக்கில் ஜேகே (ஆஷிஷ் வித்யார்த்தி) என்ற ஒரு தொழிலதிபருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டதால் சக்திவேலை ஜேகே கொல்கிறார். இதையடுத்து, வழக்கறிஞர் தொழிலைத் தீவிரமாக மேற்கொள்ளும் சூர்யா மக்களின் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கத் தொடங்குகிறார். பல்வேறு பொதுநல வழக்குகளில் திறம்பட வாதாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்புப் பெற்றுத் தருகிறார். மேலும், இலவச சட்ட மையங்கள் அமைப்பது, அடிப்படைச் சட்டங்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு அதை மக்களுக்கு வழங்குவது போன்ற செயல்கள் மூலம் தீவிரமாக செயல்படுகிறார். பொதுநல வழக்குகள் மூலம் ஜேகே -இன் தொழிற்சாலைகளை மூட வழிவகை செய்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஜேகே சதித்திட்டம் ஒன்றைத் தீட்டி, சூர்யா மீது வீண்பழி போட்டதால் அவரைக் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. பின்னர், சூர்யாவே அவருக்காக வாதாடி நிரபராதி என்று நிரூபிக்கிறார். பின்னர், அரசே சூர்யாவின் புகைப்படத்துடன் அஞ்சல் தலை வெளியிடுகிறது.
தமிழன் ஏன் முக்கியம்?
தமிழன் திரைப்படத்துக்கு முன்பாக, 90-களின் இறுதி கால கட்டத்தில் காதலுக்கு மரியாதை, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே, பூவே உனக்காக, லவ் டுடே, நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே, ஃப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான் போன்ற எண்ணற்ற படங்களில் விஜய் நடித்திருந்தார். இருப்பினும், இவை அனைத்தும் காதல், குடும்ப உணர்வு, ஆக்ஷன் போன்றவற்றை மையக்கருத்தாக வைத்து அமைந்த படங்கள்.
இன்னும் சொல்லப் போனால் விஜய் ஒரு காதல் கதாநாயகனாக மட்டுமே வலம் வந்தார். இந்தப் போக்கை மாற்றி அமைத்து விஜய்யை ஒரு சமூக அக்கறை உள்ள ஒரு கதாநாயகனாக பார்த்ததுதான் இயக்குநர் மஜித்துக்கு கிடைத்த வெற்றி. விஜய்யின் சினிமா வாழ்க்கையிலும் தமிழன் ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்படுகிறது.
ரூ. 5000 மதிப்புள்ள வயலுக்கு ரூ. 6000 வழக்குரைஞர் கட்டணம்:
அண்ணன் தம்பி இரண்டு பேர் ஆளுக்கு ரூ. 5,000 கொடுத்து நிலத்தை வாங்க, அதில் உள்ள வரப்பு யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்னை வருகிறது. ஆகையால், அவர்கள் நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு, விஜய்யின் மூத்த வழக்குரைஞரைச் சந்திக்க அலுவலகத்துக்கு வருகின்றனர். அலுவலகத்தில் இருந்த விஜய் இதைக் கேட்டு, மொத்தம் 30 வாய்தா வரும், வரப் போக செலவு ரூ. 100 வீதம் மொத்தம் 3,000 வரும்.
வழக்குரைஞர் கட்டணம் ரூ. 2,000 கோர்ட் செலவு ரூ.1,000 மொத்தம் ரூ. 5,000 மதிப்புடைய வயலுக்கு 6,000 செலவு செய்யப் போகிறீர்களா என்று கேட்டு, “வரப்புக்காக வயலை விற்று வக்கீலுக்கும் வாய்தாக்கும் கொடுக்க வேண்டியது வரும். ரெண்டு பேரும் சமாதானமா போனீங்கன்னா வயலும் வரப்பும் மிஞ்சும்” என்று அறிவுரை கூறுவார் விஜய். இறுதியில் அவர்கள் சமாதானம் ஆகிச் செல்வர்.
ஒன்றுமே இல்லாத விஷயத்துக்குக்கூட வழக்குரைஞரிடம் சென்று, அதிகமாக செலவு செய்வதைவிட சிறிது விட்டுக்கொடுத்து சிந்தித்துச் செயல்பட்டால் பணம், நேரம், அலைச்சல், மன நிம்மதி இவை அனைத்துமே மிஞ்சும். எல்லாவற்றுக்கும் நீதிமன்றம், காவல் நிலையம் என்று அலைவதை விட சமாதானமாக போகக்கூடியவற்றுக்கு நமக்குள்ளேயே பேசி அதைத் தீர்த்துக் கொள்ளலாம். நம்மால் தீர்க்க முடியாதவற்றுக்கு மட்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தியதில் இந்தக் காட்சிக்குப் பெரும் பங்கு உண்டு.
தனிநபர் கடன் அடைக்க
இந்தப் படத்தில் நாட்டின் தனிநபர் கடன் மொத்தம் எவ்வளவு என்பதை ஆராய்ந்து, அதில் ஒரு குடிமகனின் பங்கான ரூ. 4,000-ஐ நாட்டின் பிரதமருக்கு காசோலை மூலம் பிரதமரின் வெளிநாட்டுக் கடனடைப்பு நிதியில் வரவு வைக்குமாறு கடிதம் ஒன்றை அனுப்புவார் விஜய். இதன் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு நபர் மீதும் நாட்டின் பெயரில் கடன் இருந்தது என்பதைப் படித்த மக்கள் தவிர்த்து, பாமர மக்களிடையேவும் அதனைக் குறித்த பார்வையைப் பரவலாக்கினார் எனலாம். படத்தில் விஜய்யைத் தொடர்ந்து, பாமர மக்களும் அரசின் கடனை அடைக்க பணம் அனுப்பியது நாட்டின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வைக் காட்டியதெனலாம்.
தொழிலாளர் நலனுக்கு உதவிய காட்சிகள்
முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள பிரச்னை என்பது அனைத்துக் காலகட்டத்திலும் இருந்து வரும் ஒன்று. இதுதொடர்பான காட்சிகள் இவற்றை மிக எளிதாக மக்கள் மனதில் பதியச் செய்தது எனலாம்.
படத்தின் வில்லனான ஆஷிஷ் வித்யார்த்தி, அவருடைய தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தொழிலாளர்களை அவர்களுக்கு உரிய பணத்தை வழங்காமல் ஏமாற்றுகிறார். தொழிலாளர்கள் நாசரைச் சந்திக்க, அவர்களுக்காக வாதாட ஒப்புக்கொள்கிறார். இதைத் தெரிந்துகொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி, சூழ்ச்சி செய்து தொழிலாளர்களை வைத்தே நாசரைக் கொலை செய்கிறார்.
நாசர் சாகும் போது, “வேரில்லாத மரம் மாதிரிதான் தன்னுடைய உரிமை தெரியாத மனிதன். சட்டம்தான் வாழ்க்கைப் பாதைக்கு வெளிச்சம் என்பதைப் புரிய வைக்க வேண்டும்” என்று விஜய்யிடம் கூறுகிறார்.
இதில் தொழிலாளர்களின் அறியாமையைச் சுட்டிக் காட்டுவதோடு, அவர்களுக்காக நீதி கேட்க வந்த வழக்குரைஞரே கொல்லப்பட்டதுதான் அதிர்ச்சிக்குள்ளான விஷயம். இதுமாதிரியான பொதுநல வழக்குகள், பெரிய முதலாளிகள் தொடர்புபடுத்தப்பட்ட வழக்குகளை வாதிட வழக்குரைஞர்கள் முன்வராததற்கு இதுபோன்ற காரணங்களும் இருந்திருக்கலாம். இதுபோன்ற காட்சிகளின் மூலம், வழக்குரைஞர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களைத் தெரிவிப்பதிலும் திறம்பட செயல்பட்டிருக்கிறார் இயக்குநர்.
சட்டத்தின் முன் அரசாங்க அதிகாரிகள்
நாசரின் இறப்புக்குப் பிறகு, சிறந்த வழக்குரைஞராக உருவெடுக்கும் விஜய், மக்களின் பிரச்னைகளுக்கு நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார். இதன் மூலம், கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரி, எம்எல்ஏ போன்ற மக்களின் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, அவர்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்.
இந்த வரிசையில், காவல்துறை அதிகாரிகளும் விதிவிலக்கல்ல. முதியவர் ஒருவர் புகார் கொடுக்க காவல் நிலையம் செல்கிறார். அங்கு, தலைமைக் காவலர் அந்த முதியவரை மரியாதைக் குறைவாக நடத்துவதுடன், ”இளநீர், பேப்பர் கட்டு, பீடி, டீ, சிகரெட்” போன்ற பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். மேலும், “காவல்துறை ஆய்வாளரை ஐயா என்றுதான் அழைக்க வேண்டும்” என்றெல்லாம் கூறி அந்த முதியவரை சிரமப்படுத்துகிறார் தலைமைக் காவலர்.
இதனை வழக்காகப் பதிவு செய்து அந்த முதியவருக்காக வாதாடும் விஜய்,“தெருவோரக் கடையில் தினமும் ஐந்து ரூபாய் வாங்குவதும் பிளாட்ஃபாரம் கடைகளில் பத்து ரூபாய் வாங்குவதும் வாடிக்கையாக வைத்துள்ளீர்கள். கஞ்சிக்கு இல்லாதவன் பிச்சை எடுக்கலாம். இப்படி காக்கிச்சட்டை போட்டு....” என்று கேட்கும் கேள்விகள் எல்லாம் அனைத்து காவல் நிலையங்களில் நடைபெறவில்லை என்றாலும், இப்படியான நிகழ்வுகள் நடைபெறும் காவல் நிலையங்களும் இருக்கத்தான் செய்கின்றன. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்கிற கருத்து அன்று வலுவாகவும் அமைந்தது.
அடிப்படைச் சட்டங்கள் அறிய
இதுமாதிரியான பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்னவென்று பார்க்கும்போது, அடிப்படைச் சட்டங்கள் மக்களுக்குத் தெரியாததுதான். அடிப்படைச் சட்டங்கள் மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டும் என்ற முயற்சியில் விஜய் ஈடுபட்டு, அடிப்படைச் சட்டம் அடங்கிய புத்தகத்தை இலவசமாக விநியோகம் செய்கிறார். நாட்டின் குடிமக்களாக உள்ள ஒவ்வொருவருக்கும் அடிப்படைச் சட்டங்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வசனங்களும் காட்சிகளும் மக்களிடம் புதிய கோணத்தைக் கொடுத்தது எனலாம்.
அதிலும் குறிப்பாக, “நம் நாட்டில் உள்ளவர்களுக்கு அறிவியல் தெரிவிதைவிட, ஆங்கிலம் தெரிவதைவிட, வரலாறு தெரிவதைவிட, அடிப்படைச் சட்டம் தெரிய வேண்டும்” என்ற வசனங்கள் அடிப்படைச் சட்டத்தின் தேவையை வலியுறுத்துகிறது.
நீதிமன்றத்தை கேள்விக்குள்ளாக்குதல்
இறுதியில், ஆஷிஷ் வித்யார்த்தியின் சதித் திட்டத்தால் விஜய் மீதே அவதூறு வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். சட்டம் தெரிந்த வழக்கறிஞர்களுக்கே இந்த நிலைமை என்றால் பாமர மக்களின் கதி என்ன என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
விஜய் தனக்காகத் தானே வாதாட, ”ஒரு நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாற்றப்படும் என்றால் ஏற்கெனவே, வழங்கப்பட்ட நீதிமன்றம் எதற்கு? நீதிபதி எதற்கு? உயர் நீதிமன்றம் சென்னையில்; உச்ச நீதிமன்றம் தில்லியில். பணம் இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வாதாடி ஜெயிக்க முடியும், ஏழைகளால் முடியுமா?” என்று நீதிபதியை நோக்கி கேட்கப்படும் கேள்விகள் சட்டங்களும் மாற்றப்பட வேண்டியவை என்பதை எடுத்துக் காட்டுகின்றன. மேலும், அடிப்படைச் சட்டங்கள் பள்ளிகளில் பாடமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தெல்லாம் வரவேற்பைப் பெற்றது.
இளைஞர்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மக்கள் அனைவரும் தங்களின் உரிமைகளுக்குக் குரல்கொடுக்க வேண்டும் என்றும் அப்படி செய்பவை அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்த்த படத்தின் இறுதியில் நாயகனாக சூர்யாவுக்கு அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.
திரைப்படங்கள் என்பவை ஏதோ திரையில் பார்த்துவிட்டு, அந்த நேரம் மகிழ்ச்சியாகக் கொண்டாடிவிட்டு செல்லும் ஒரு பொழுதுபோக்காக மட்டும் அல்ல; மாறாக அது ஏதோ ஒரு கருத்தைப் பார்ப்பவர்கள் மத்தியில் விதைப்பதுடன் பலருக்கும் அவை புதிய உத்வேகத்தைத் தருவதாக அமைகின்றன. அந்த வரிசையில் தமிழன் படத்தைப் பார்த்த பல பேருக்கு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவு உருவாகி இருக்கலாம். வெறும் காதல் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருந்த விஜய், தமிழன் மூலம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது அன்றும் சரி, இன்றும் சரி பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
Summary
Chief Minister Vijay played a role that reflected social concern in the film Thamizhan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்ப உறவுகளைக் கொண்டாடிய விஜய்யின் காதலுக்கு மரியாதை!
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்!

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமைச்சா்

பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம்! முதல்வா் கைப்பேசியில் ஆறுதல்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை


