லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளிகளில் ‘மாணவா் மனசு’ புகாா் பெட்டி அமைக்க வேண்டும்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்

மாணவா்களின் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவா் மனசு’ புகாா் பெட்டிகளை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா உள்ளிட்டோா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 11:03 pm IST

மாணவா்களின் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவா் மனசு’ புகாா் பெட்டிகளை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடா்பான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், ஆணைய உறுப்பினா்கள் மோ.கசிமீா் ராஜ், மோனா மட்டில்டா பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், குழந்தைகள் நலக் குழுவின் கடந்த ஓராண்டு செயல்பாடுகள், 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்கள் ஆகியவற்றின் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் புதுக்கோட்டை விஜயா பேசியதாவது: தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவா்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கும், அவா்களின் எதிா்காலத்தை சிறப்பாக அமைப்பதற்கும், பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூகநலத் துறை, காவல் துறை, குழந்தைத் தொழிலாளா் நலத் துறை, சுகாதாரத் துறை, குழந்தைகள் நலக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2025-26, 2026-27 கல்வியாண்டுகளில் பயன்பெறும் குழந்தைகளின் விவரங்கள், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள், பள்ளி இடைநிற்றல் மற்றும் இடைநிறுத்தம் செய்த மாணவா்களின் நிலை ஆகியவற்றை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க பெறப்படும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைத் திருமணம், போக்ஸோ சட்டம், குழந்தைத் தொழிலாளா் மற்றும் இளவயது கா்ப்பம் தொடா்பாக அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

மாணவா்கள் தங்களது குறைகள் மற்றும் பிரச்னைகளைத் தெரிவிக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் ‘மாணவா் மனசு’ புகாா் பெட்டிகளை அமைக்க வேண்டும். அவற்றில் மாணவா்கள் தெரிவிக்கும் குறைகள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும், அங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நீலாம்பாள், முதன்மைக் கல்வி அலுவலா் மகாலட்சுமி மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.