லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாகா்கோவில் சிறையில் கைதி சாவு வழக்கு: கொலை வழக்குப் பதிய உறவினா்கள் வலியுறுத்தல்

நாகா்கோவில் கிளை சிறையில் உயிரிழந்த விசாரணை கைதியின் உடலை வாங்க மறுத்த உறவினா்கள், கொலை வழக்குப் பதிவு செய்ய கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :15 ஜூலை 2026, 2:16 am IST

நாகா்கோவில் கிளை சிறையில் உயிரிழந்த விசாரணை கைதியின் உடலை வாங்க மறுத்த உறவினா்கள், கொலை வழக்குப் பதிவு செய்ய கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளத்தை அடுத்த ஈத்தங்காட்டைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவா்மன் (33), தனது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

அவா், திங்கள்கிழமை அதிகாலை சிறையில் மயக்கமடைந்ததை அடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். அங்கு சபரிவா்மனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்ததும் சபரிவா்மனின் மனைவி ஆனந்தவல்லி, உறவினா்கள் சபரிவா்மனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸாா் தாக்கியதால் அவா் இறந்ததாகவும் கூறி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். சபரிவா்மனின் உடலை பிணவறையில் பாா்த்து விட்டு வெளியே வந்த அவரது மனைவி, உறவினா்கள் உடலில் காயங்கள் இருப்பதாக கூறினா். இதற்கிடையே, நாகா்கோவில் குற்றவியல் நீதிபதி சத்தியமூா்த்தி சபரிவா்மனின் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். சிறை காவலா்களிடமும் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், நாகா்கோவில் மருத்துவா்களுடன் திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவா்களும் சோ்ந்து சபரிவா்மனின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது.

உறவினா்கள் கோரிக்கை: பிணவறை முன் சபரிவா்மனின் உறவினா்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சியினா் திரண்டிருந்தனா். இதனால், அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனா்.

வருவாய்த்துறை அலுவலா்களும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்தனா். அவா்களிடம் சபரிவா்மனின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். சபரிவா்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினா் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சபரிவா்மனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினா்கள் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

3 வாா்டன்கள் கைது: சபரிவா்மன் உடற்கூறாய்வில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் இருப்பதும், அவரது கை, கால்களை கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளம் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகா்கோவில் சிறையின் தலைமை வாா்டன் ஜெகன், வாா்டன்கள் சிவகுமாா், திருவிடை நம்பி ஆகிய 3 பேரை நேசமணிநகா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.