லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் கடும் வறட்சியால் பால் தட்டுப்பாடு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், மாடுகளின் கறவைத்திறன் குறைந்து பால் தட்டுப்பாடு நிலவுகிறது.

Published On :31 ஜனவரி 2024, 1:35 pm IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், மாடுகளின் கறவைத்திறன் குறைந்து பால் தட்டுப்பாடு நிலவுகிறது.
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டதால் விவசாயிகள் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக பலர் குடும்பத்துடன் கால்நடைகள் வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். 
மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் மாடுகளை வளர்க்கும் இவர்கள், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பால் பண்ணைகளில் பாலை விற்பனை செய்கின்றனர். இந்த பால் பண்ணைகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தது போக மீதமுள்ள பால்  காரைக்குடி ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தண்ணீர் கலக்காத பாலின் தரம், கெட்டித்தன்மை, விலை குறைவு போன்ற காரணங்களால் தினமும் காலை, மாலை நேரங்களில் கூட்டுறவு பால்பண்ணைகளுக்கே பொதுமக்கள் வந்து பால் வாங்கிச் செல்கின்றனர். 
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் பாலை வாங்குவதைக் காட்டிலும் பண்ணைகளில் விற்கப்படும் தூய பாலை வாங்குவதில் தான் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மாடு வளர்ப்போர் நேரடியாக மக்களிடம் பால் விற்பனை செய்தாலும் அதில் தண்ணீர் கலக்கப்படலாம் எனக் கருதி அவர்களிடமும் பால் வாங்குவதை தவிர்த்துவிடுகின்றனர். 
தற்போது மேற்கண்ட பகுதிகளில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவுவதால் மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனம் கிடைக்கவில்லை. இதனால் கூடுதல் விலை கொடுத்து கடைகளில் புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். பசுந்தீவனம் தட்டுப்பாடு காரணமாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பாலின் அளவு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. 
இதனால்  பண்ணைக்கு வரும் பாலின் அளவு தினமும் குறைந்து வருகிறது. பண்ணைகளுக்கு போதிய பால் வராததால் அங்கு வாடிக்கையாளர்கள் காத்திருந்து பால் வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறை காரணமாக  காரைக்குடி ஆவின் நிறுவனத்துக்கு வாரத்தில் சில நாள்கள் மட்டுமே பால் அனுப்பப்படுகிறது. 
இது குறித்து மானாமதுரை கூட்டுறவு பால்பண்ணையில் பால் விற்பனை செய்யும் ஊழியர் முருகன் கூறியது: மழைக்காலங்களில் வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளுக்கு போதுமான அளவுக்கு தீவனம் கிடைக்கும். புல் பூண்டுகளை தின்பதால் கறவைத்திறன் அதிகரித்து பால் பண்ணைகளுக்கு வரும் பாலின் அளவும் கூடுதலாக இருக்கும். 
மானாமதுரை பால் பண்ணைக்கு கொள்முதல் செய்ய கொண்டுவரப்படும் பாலின் தரம், கெட்டித்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வாங்கப்படுகிறது. தற்போது வறட்சியால் பண்ணைக்கு கொள்முதலுக்கு வரும் பாலின் அளவும் தினமும் குறைந்துகொண்டே வருவதால் வாடிக்கையாளர்களுக்கு பால் விற்பனை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பண்ணையில் பால் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பாலுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. மழைக்காலம் தொடங்கிவிட்டால் மாடுகளின் கறவைத்திறன் அதிகரித்து பால் வரத்து அதிகரிக்கும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.