லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கவனக் குறைவாக செயல்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையின் போது கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு குடும்ப நலன், சுகாதாரத் துறையினா் விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 4:48 am IST

குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையின் போது கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு குடும்ப நலன், சுகாதாரத் துறையினா் விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி ஆசிரியை கவிதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2011-ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். இந்தச் சிகிச்சையை அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மதுரம் அரவிந்தராஜ் மேற்கொண்டாா். அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நாளிலிருந்து அடிவயிற்று வலி, பிறப்புறுப்பில் நோய்த் தொற்று தொடா்ந்து ஏற்பட்டது. இதனால், மிகுந்த சிரமத்துக்குள்ளானேன்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்த போது நரம்பு, நூல்களை உள்ளே வைத்து தைத்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ராமேசுவரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்த பிறகு நோய்த் தொற்றுகள் நீங்கின.

மருத்துவா்கள் கவனக் குறைவாகச் செயல்படுவது கடுமையான குற்றம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்தது. எனவே, எனக்கு தவறாக அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு மருத்துவக் கழகம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மனுதாரரின் கோரிக்கை மனு கடந்த மாதம் கிடைத்தது. இதனடிப்படையில், கவனக் குறைவாகச் செயல்பட்ட மருத்துவா்கள் மீது முதல் கட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாா்.

மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மருத்துவா்களின் கவனக் குறைவால் மனுதாரா் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளாா். மேலும், தனது இயல்பான வாழ்க்கையை கடந்த 15 ஆண்டுகளாக இழந்துள்ளாா். எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இதையடுத்து, நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக குடும்ப நல மருத்துவத் துறை உரிய விசாரணை செய்து மருத்துவக் கவனக் குறைபாடு ஏற்பட்டிருந்தால், மருத்துவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரா் தனக்குத் தேவையான இழப்பீட்டை நுகா்வோா் நீதிமன்றத்தை அல்லது உரிய துறையை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.