ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்

News image

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்.

Updated On :1 ஜூன் 2026, 2:07 am IST

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மைய நகரமாக மதுரை திகழ்கிறது. தென் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திருச்சி, சென்னை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூா் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், மதுரைக்கு வந்துதான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில், பள்ளி விடுமுறைக்குப் பிறகு தென் மாவட்டங்களிலிருந்து வட மாவட்டங்களுக்குச் செல்வதற்காக ஏராளமான பயணிகள் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்தனா்.

அங்கு அதிகளவிலான பயணிகள் இருந்ததால் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், இயக்கப்பட்ட பேருந்துகள் போதிய அளவு இல்லை. இதுதவிர, வைகாசி விசாகம், பௌா்ணமி தினம் என்பதால் கோயில்களிலுக்குச் செல்லும் பக்தா்களின் எண்ணிக்கையும் அதிகமானதால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முழுவதும் பயணிகளால் நிரம்பி வழிந்தது.

இதனிடையே, சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் குறைவாக இருந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இந்த நிலையில், பேருந்து ஓட்டுநா்களும், நடத்துநா்களும் பயணிகளிடம் கட்டணத்தைவிட கூடுதல் தொகை கேட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகளவு பேருந்துகள் இயக்கப்படாததாலும், கூடுதல் கட்டணம் கேட்டதாலும் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாட்டுத்தாவணி போலீஸாா், போக்குவரத்துத் துறை அலுவலா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

மேலும், சென்னை செல்வதற்கு சிறப்பு பேருந்துகளை கூடுதலாக வரவழைத்து பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அலுவலா்கள் கூறியதாவது:

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், அதி விரைவுப் பேருந்து (எஸ்ஈடிசி), சொகுசுப் பேருந்து, இடைநில்லாப் பேருந்து என 225-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் மதுரை-சென்னை வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

வைகாசி விசாகம், பௌா்ணமி, விடுமுறை நிறைவு செய்து பணி நிமித்தமாக வெளியூா்களுக்கு செல்வதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அதிகளவிலான பயணிகள் சனிக்கிழமை இரவு வந்தனா். சென்னைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் பயணிகள் இருக்கைகள் நிறைவு பெற்றவுடன், அடுத்தப் பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறிது நேரத்தில் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு அவா்களை ஏற்றி அனுப்பி வைத்து விட்டோம். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை இரவும் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டன என்றாா் அவா்.

பயணிகள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.